இதழ் - 165 இதழ் - ௧௬௫
நாள் : 13 - 07 - 2025 நாள் : ௧௩ - ௦௭ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
சாதிகள் இல்லையடி பாப்பா
வித்யாலய நடைமுறைகளுள் ஒன்று அக்காலச் சமூகத்தைக் காட்சிப்படுத்துகிறது. ஏழை மாணவர்களுக்குக் கல்வியளித்தல் என்பது வித்யாலயத்தின் நோக்கமாக இருந்தாலும் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்பதே அதன் தலையாய நோக்கம் எனலாம். வித்யாலயம் சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பதில்லை என்றாலும் சமூகம் அதனைப் பார்க்கவே செய்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது அத்தனைக் கடினமல்ல. சாதி பலவழிகளில் வெளிப்படும். அவற்றுள் பெயர்கள் சாதி வெளியீட்டுக் காரணிகளுள் ஒன்று. பெயர்களின் வழியாக வெளிப்படும் சாதியடையாளத்தைக் களைவதற்காக வித்யாலயத்தில் சேரும் மாணவர்களுக்கு வேறு பெயரிடும் வழக்கம் இருந்துள்ளது தூரனின் எழுத்துக்களிலிருந்து தெரிய வருகிறது. அதே விதமாக வித்யாலயத்தில் சாதி கேட்பதும் சாதி சொல்வதும் கூடாது என்ற வழக்கம் இருந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை தூரன் பதிவு செய்கிறார்.
எனது நெருங்கிய உறவினர் ஒருவர் தமாஷாகவும் நகைச்சுவையுடனும் பேசுவதில் வல்லவர். அவர் ஒருநாள் 'பைல்' வேளையில் வந்து சேர்ந்தார். வரிசையாகச் செல்வதால் இல்லத்தலைவர் சோதனை செய்வதற்குச் சற்று நேரம் பிடிக்கும்.
ஆகவே அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வரிசையில் கடைசியாக நிற்கும் ஒருவனை அன்போடு அழைத்தார். அவர் மார்புறத் தழுவிக்கொண்டு “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
உடனே அந்த மாணவன் “பரமேஸ்வரன்” என்று பதில் அளித்தான்.
“சரி பரமேஸ்வரன் என்பது வித்யாலயத்தில் வைத்த பெயர், முன்னால் உனக்கு என்ன பெயர்?” என்று விடாது கேட்டார்.
“அதெல்லாம் இங்கு சொல்லக் கூடாது” என்று முதலில் மாணவன் தயங்கிக் கொண்டே மறுமொழி புகன்றான்.
“அடே! சும்மா சொல். நான் அதை வெளியில் சொல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று வற்புறுத்தினார் அந்த உறவினர்.
வலது கையில் அம்மாணவனை இறுகத் தழுவிக் கொண்டு அப்படியே இடது கையால் கன்னங்களைத் தடவிக் கொடுத்தார். அதனால் அம்மாணவன் மயங்கிப் போய் உண்மைப் பெயரைச் சொல்லிவிட்டான். (மாணவனின் பெயர் மூலம் ஏனோ சாதி அவருக்குத் தெரியவில்லை போலும்).
“சரி பெயர் வந்துவிட்டது. உன் ஜாதி என்ன?” என்று மீண்டும் கேட்டார் அந்தப் பெரியவர்.
“வித்யாலயத்திலே ஜாதி எல்லாம் சொல்லக் கூடாது” என்று பதில் அளித்தான் பரமேஸ்வரன்.
“சும்மா சொல். நான் ரகசியமாக வைத்துக் கொள்வேன். யாருக்கும் சொல்ல மாட்டேன்” என்று அன்போடு தழுவிக் கொண்டே வற்புறுத்தினார்.
அதனால் பரமேஸ்வரன் ஒரு கணம் மயங்கிவிட்டான். வித்யாலய விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டான்.
“ஹரிஜன்” என்று மெதுவாக உண்மையை ஒப்புக் கொண்டான்.
“ஹரிஜனா? எட்டப்போ, எட்டப்போ” என்று தழுவிய கரங்களையும் இழுத்துக்கொண்டு வாய்விட்டுச் சொல்லிவிட்டார்.
இதை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு விநாடிக்கு முன்னால் அன்போடு தழுவிக் கொண்ட கரங்கள் “ஹரிஜன்” என்ற சொல் கேட்ட மாத்திரத்திலே தீட்டு வந்துவிட்டதாம். மறுபடியும் குளித்திருப்பார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்நிகழ்ச்சி வித்யாலயத்தில் நடைமுறையிலிருந்த பெயரிடுதல், சாதி வெளிப்படுத்தாமை என்ற வழக்கங்களை எடுத்துரைக்கிறது.
( வித்யாலய நினைவுகள் தொடரும் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment