இதழ் - 126 இதழ் - ௧௨௬
நாள் : 22- 09 - 2024 நாள் : ௨௨ - ௦௯ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 126
” உரையார் இழித்தக்க காணிற் கனா ”
விளக்கம்
ஒருவன் தன் நண்பரைப் பழித்து இழிவாகத் தூற்றினால் அந்த இழிவு தன்னையும் வந்தடையும் என்றும் தனக்கு இழிவைத் தரும் செயல் குறித்து கனவு கண்டவா் அதை வெளியே யாருக்கும் சொல்லமாட்டாா்கள் என்பதும் இப்பழமொழியின் பொருளாகும்.
” உரையார் இழித்தக்க காணிற் கனா ”
உண்மை விளக்கம்
கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.
பலரும் அமர்ந்திருக்கும் அவையில் ஒருவர் தன் நண்பரைப் பழித்துப் பேசமாட்டார்கள். ஆராய்ந்து தெளிந்த நண்பர்களை அறிவுடையோர் அவையில் இழிவாகப் பழித்துப் பேசுதல் அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் ஆகும்.
ஏனெனில் தனக்கு இழிவைத் தரும் செயல் குறித்து கனவு கண்டவர் அதை வெளியே யாருக்கும் சொல்லமாட்டார்கள் என்பதையே 'உரையார் இழித்தக்க காணிற் கனா' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment