பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 194                                                                                    இதழ் - ௧
நாள்  :  15 / 03 / 2026                                                                நாள்   :   / 0 / ௨௦௨

 


ஆறும் குளமும் பெயரால் எழுந்த ஊர்கள்

தெள்ளாறு

    வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் தெள்ளாறு என்னும் ஊர் உள்ளது. பல்லவ மன்னனாகிய நந்திவர்மன் காலத்தில் தெள்ளாற்றில் நிகழ்ந்த பெரும் போர் நந்திக்கலம்பகத்தில் பாராட்டப்பட்டுள்ளது. பாண்டியனது பெருஞ் சேனையைத் தெள்ளாற்றில் வென்றுயர்ந்த பல்லவன் பாட்டுடைத் தலைவனாயினான்; தெள்ளாறெறிந்த நந்தி என்று புகழப் பெற்றான்; இங்கனம் பல்லவ சரித்திரத்திலும், நந்திக் கலம்பகத்திலும் குறிக்கப்படும் ஊர், பழைய வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்ததென்றும், அங்குள்ள ஈசன் கோயில் திருமூலத்தானம் என்னும் பெயருடைய தென்றும் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.


கடிக்குளம்

    பழமை வாய்ந்த சிவப்பதிகளுள் மூன்று குளப்பதிகள் சிறந்திருந்தன என்பது திருஞானசம்பந்தர் பாட்டால் விளங்குகின்றது. அவற்றுள் ஒன்று பாடல் பெற்றுள்ள கடிக்குளம் என்ற ஊராகும். குளிர் பூஞ்சோலையினின் நடுவில் அமைந்த கடிக்குளப்பதியில் கோயில் கொண்டிலங்கும் ஈசனை,

"கடிகொள் பூம்பொழில் சூழ்தரு
கடிக்குளத் துறையும் கற்பகம்"

    என்று போற்றினார் திருஞான சம்பந்தர். அவர் திருவாக்கின் சிறப்பினால் இப்பொழுது கற்பகனார் கோயில் என்பது கடிக்குளத்தின் பெயராக வழங்குகின்றது. ஏனைய குளங்களின் வகை, திருநாவுக்கரசரது பாட்டால் தெரிகின்றது. “வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளமும் "இறைவன் கோயில் கொண்ட குளங்கள் என அவர் பாடியுள்ளார்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment