பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் : 1                                                                           இதழ் :
நாள் : 1-5-2022                                                               நாள் :
-ரு-௨உஉ

     ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புமே பழமொழியாகும். பழமொழி சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமையும். இவை வாய்மொழி வழக்காகவும்,  நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. சூழலுக்கு ஏற்றாற்போல் பொருளை விளக்க அவை உதவுகின்றன. தமிழினத்தின் செம்மையான நல்வாழ்வுக்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் விளங்குகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஞானத் தெளிவுரைகளாகவும் விளங்குகின்றன.

     பழமொழியை 'முதுமொழி' என்றும் அழைப்பர். முதுமொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியர்,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
  ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
  குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
  ஏது நுதலிய முதுமொழி என்ப ”

என்று எடுத்துரைக்கிறார்.      

     ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழி நானூறு. இப்படி ஒரு நூலை உருவாக்கி, மக்களின் ஒழுகலாறுகளை முறைப்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்கு உரியவர், முன்றுறை அரையனார் ஆவார். முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்ற உண்மையை வலியுறுத்தும் விதமாக பழமொழி நானூறு நூலை ஆக்கியுள்ளார்.

     இந்நிலையில் பழமொழிகளை மக்கள் உள்ளத்தில் பதிக்கவும், அவற்றின் கருத்தாழத்தைப் புரிந்துகொண்டு, அவை அமைந்த செய்யுட்களை நினைவுபடுத்திப் பயன்பெறவும், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் முன்னெடுத்துள்ள இந்தத் தமிழமுதம் மின்னிதழ் உதவும் என்று நம்புகிறேன்.

பழமொழி - 1

'அக்காரம் பால் செருக்கும் ஆறு'


     பாலில் சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, மேலும் விரும்பப்படுவது போல, அறச்செயல்களிலே ஈடுபடத் தூண்டுவதனால் ஒருவன் மேலும் சிறப்பே அடைவான் என்பது இப்பழமொழியின் பொருள். (அக்காரம் -  சர்க்கரை, இனிப்பான பொருள் : கற்கண்டு போன்றவை)

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
'மிக்க வகையால் அறஞ்செய்க!' எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.

      அறச் செயல்களின் மூலம் ஒருவன் பெரும்பொருள் பெற்றான் என்றால் அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அறநெறயில் வந்ததாகவே இருக்கும். சர்க்கரையால் பாலின் சுவை மேலும் கூடுவதைப் போன்று அறநெறியில் ஈட்டும் பொருளும் அத்தகையதே என இப்பழமொழியின் பொருள் அமைகிறது.

( தொடர்ந்து அறிவோம்... )
 
 

No comments:

Post a Comment