இதழ் - 140 இதழ் - ௧௪௦
நாள் : 29 - 12 - 2024 நாள் : ௨௯ - ௧௨ - ௨௦௨௪
விஜய நகர மன்னருள் பல்லாற்றானும் தலை சிறந்தவன் கிருஷ்ண தேவராயன். இம் மன்னன் பெருமையை, "படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றி லாதான் மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன்” என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார்.
மாற்றாரை வென்று மாபெரும் புகழ்பெற்று வாழ்ந்த கிருஷ்ண தேவன் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமக விழாவிற்குச் செல்லும் வழியில் பொன்னேரி வட்டத்திலுள்ள அரகண்டபுரம் என்னும் ஊரிலே தங்கினான். அங்கு அரிதாசர் என்று பெயர் பெற்ற பரம வைணவர் ஒருவர் இருந்தார். அவர் கனவிலே பெருமாள் அறிவித்த வண்ணம் கிருஷ்ணதேவராயன் அவ்வூரிலே திருமால் கோயில் ஒன்று கட்டுவித்தான். அது வேதநாராயணன் கோயில் என இன்றும் விளங்குகின்றது.
அக்கோயிலுக்கு வேந்தன் அளித்த நிவந்தங்கள் கோபுரத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஆரிய வேதமும், திராவிட வேதமும் ஓதுவார்க்கு ஏற்படுத்திய நன்கொடையாகும். கோயில் காரியங்களை எல்லாம் மன்னன் அரிதாசரிடம் ஒப்புவித்தான்; பெருமாள் அருளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த அரகண்டபுரத்தை என்றும் நினைத்து இன்புறும் வண்ணம் நாகலாம்மாள் என்னும் தன் தாயின் பெயரை அவ்வூருக்கு இட்டான். அன்று தொட்டு அரகண்டபுரம் என்னும் பழம்பெயர் மாறி நாகலாபுரம் என்ற புதுப் பெயர் வழங்கலாயிற்று.
பொன்னேரி வட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரின் வரலாறும் உணரத்தக்கதாகும். ஆதியில் கூவம் என்பது அதன் பெயர். குன்றூர் நாட்டுக் கூவம் என்பது சாசன வாசகம். விஜய நகர மன்னனாகிய அச்சுதராயன் அங்கு நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் கட்டுவித்தான்; அவ்வளவில் அமையாது நரச நாயக்கன் என்னும் தன் தந்தையின் பெயர் விளங்குமாறு நரச நாயகபுரம் என்று அவ்வூருக்குப் பெயரிட்டான். ஆயினும் பெருமாள் நாமத்தையே பெரிதும் பேசக் கருதிய பொது மக்கள் நரசநாயகபுரத்தை நரசிங்கபுரம் என ஆக்கி விட்டனர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment