இதழ் - 78 இதழ் - ௭௮
நாள் : 22-10-2023 நாள் : ௨௨-௧0-௨௦௨௩
வீரவிருதுகள்
வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும், குறுநில மன்னரும் அரிய வீரச்செயல்களால் அழியாப்புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. அவ்விருதுகளின் பெயர்களில் ஊர்கள் வழிங்கிவந்தமை தமிழக ஊர்ப்பெயர்களில் காணப்படுகின்றன.
செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன் செய்யாற்று வென்றான் என்ற பட்டம் பெற்றான். வீர விருதுகள் அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், பாலாற்று வென்றான் என்று பாராட்டப் பெற்றான். செய்யாற்று வென்றான் என்பதும், பாலாற்று வென்றான் என்பதும், ஆர்க்காட்டு வட்டத்தில் இன்றும் ஊர்ப்பெயர்களாக விளங்குகின்றன.
நெல்லை நாட்டில் சென்றவிடமெல்லாம் செருவென்ற சிறந்த படைத் தலைவன் ஒருவன் எப்போதும் வென்றான் என்னும் உயரிய பட்டம் பெற்றான். அப்பட்டம் இன்றும் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.
போர்க்களத்தில் தனித்தனியே வீரம் விளைத்துப் புகழ் பெற்ற ஆண்மையாளரும் நமது தமிழ்நாட்டில் உண்டு. ஒரு வீரன் மாற்றார் விடுத்த அம்புகளைத் தன் நெடுங்கரத்தால் பிடித்து ஒடித்தான். அச்செயல் கண்டு வியந்த படைத்தலைவன், அவ்வீரனுக்குக் கணை முரித்தான் என்ற பட்டம் அளித்தான். மற்றொரு வீரன் மாற்றார் பொழிந்த சரமாரியைக் கண்டும் அச்சமென்பது சிறிதுமின்றி மலை போன்ற மார்பில் அம்புகளைத் தாங்கி நின்றான். அவ்வீரச் செயலை வியந்து அவனைச் சரந்தாங்கி என்று சீராட்டினார்கள். இவ்விரு பட்டங்களும் பாண்டி நாட்டில் ஊர்ப் பெயராக வழங்குகின்றன. மலைதாங்கி என்னும் பெயருடைய ஊர் ஒன்று சேலம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நாட்டில் அவ்வப்போது தலைகாட்டிய அவலங்களையும், குழப்பங்களையும் அடக்கி, அரசருக்கும் குடிகளுக்கும் நலம் புரிந்த வீரர்களும் உயரிய பட்டம் பெற்று விளங்கினர். உள் நாட்டுக் கலகத்தை ஒடுக்கிய ஒரு வீரனை அமர்அடக்கி என்றும், கொடுமை விளைத்த ஒரு கூட்டத்தாரின் கொட்டத்தை ஒடுக்கிய மற்றொரு வீரனை மறம்அடக்கி என்றும் தமிழகம் பாராட்டியது. இவ்விரண்டு பட்டங்களும் தஞ்சை நாட்டில் இன்றளவும் ஊர்ப்பெயர்களாக விளங்குகின்றன.
தென்னார்க்காட்டில் உலகங்காத்தாள் என்பது ஓர் ஊரின் பெயர். கானாடுகாத்தான் என்பதும், மானங்காத்தான் என்பதும் பாண்டி நாட்டிலுள்ள ஊர்கள். போர்க்களத்திலும் அவைக்களத்திலும் சிறந்த சேவை செய்தவர்க்குப் பழந்தமிழ் மன்னர் ஏனாதி என்ற பட்டம் வழங்கினர். நாட்டுக்கும் அரசுக்கும் நற்றொண்டு செய்து பண்டைப் பெருமக்கள் பெற்ற அப்பட்டங்கள் சில ஊர்ப்பெயர்களில் இன்றளவும் நின்று நிலவுகின்றது. ஏனாதி மங்கலம் என்ற ஊர் தென்னாற்காட்டுத் திருகோவிலூர் வட்டத்தில் உள்ளது. ஏனாதிமேதி என்பது தென்னாற்காடு வட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர்.
தஞ்சை நாட்டிலுள்ள வீரமங்கலம், பரிவீரமங்கலம், கொற்றமங்கலம், செருமங்கலம் முதலிய ஊர்கள் பழந்தமிழரின் வீர வாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் எழுந்தவைகளே.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment