பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 62                                                                                             இதழ் -  
நாள் : 02-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
   
 
பழமொழி – 62   
” இல்லை உயிருடையார் எய்தா வினை “
 
விளக்கம்
        முயற்சியுடைய ஒருவன் தோல்வியுற்ற காலத்தில் புறமுதுகிட்டாலும் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாதுகாப்பின் பிற்காலத்தில் வரும் பகையை வெற்றி கொள்ளலாம் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
        பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
        செயிரறு செங்கோல் செலீஇயினான் 'இல்லை
         உயிருடையார் எய்தா வினை.'

     பராந்தகச் சோழனின் மகன் கரிகால் வளவன், பகைவர் இட்ட நெருப்பினால் காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்றான். பின்னர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயரையுடைய தளபதியைத் தனக்குத் துணையாகப் பெற்று, பிற்காலத்தில் தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத்தினான்.
 
        முயற்சியுடையவார் உயிருடன் இருப்பின் தான் அடைய முடியாத வெற்றிகள் எவையுமில்லை என்பதை 'இல்லை உயிருடையார் எய்தா வினை’ என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment