பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - ஒளவை

இதழ் - 140                                                                           இதழ் - ௧
நாள் : 29 - 12 - 2024                                                         நாள் :  - ௧௨ - ௨௦௨௪



ஔவை ( கி.பி. 12 )

   
ஔவை என்று சொன்னாலே வயதான தோற்றத்துடன் கூடிய ஒரு சித்திரம் நம் கண் முன்னே எழுவது  தவிர்க்க முடியாதது.  ஆனால் ஔவை என்ற பெயரில் தமிழகத்தில் பல புலவர்கள் இருந்துள்ளார்கள் என்பதனை இதுவரை வந்த தமிழமுத  இதழ்கள் மூலம் அறிந்து கொண்டோம். அந்த வகையில் இந்த இதழில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பின்னர் தோன்றிய அற நூல்களைத் தந்த ஔவை பற்றிப் பார்க்கலாம். 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக் கோவை போன்ற நூல்களைக் கொடுத்தவர் ஔவை.

அறம் வளர்த்த தமிழகத்தில் தமிழ் புலவரான ஔவை அற நூல்கள் மூலம் நல் ஒழுக்கங்களை நம்மிடையே முன் வைத்துள்ளார். ஆத்திசூடியில் மொத்தமாக 109 அறக்கருத்துகளை முன்வைக்கிறார்.

'அறம் செய விரும்பு' எனத் தொடங்கியதன் மூலம் விருப்பத்துடன் அறத்தினைச் செய்ய வேண்டும் என்பதனை முதன்மைப்படுத்தி அறத்தினை முதன்மையானதாகக் கூறுகிறார்.

அறம் செய்தல் என்பது எவருடைய கட்டாயத்தின் பெயரிலோ அல்லது சுயநலத்துடன் கூடிய எதிர்பார்ப்புடனோ இருத்தல் கூடாது  என்பதனை விரும்பு என்ற சொல்லின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் எனலாம். 

ஆத்திசூடியினை முடிக்கும் போது 'ஓரஞ்சொல்லேல்' என்பதன் மூலம்,  எவரைப் பற்றியும் தவறாக மற்றவர்களிடம் சொல்லாதே என்கிறார். 

விரும்பு எனத் தொடங்கி, சொல்லாதே என ஆணையுடன் முடிக்கிறார் எனலாம்.

ஆத்திசூடியினைக் குழந்தைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் கற்று அறத்தினைப் பின்பற்றுவோம்.

வரும் கிழமையும் ஔவை வருவார் . . .


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment