பக்கங்கள்

தமிழ் வளர்த்த செவ்வேள்

இதழ் - 159                                                                                    இதழ் - ௧
நாள் : 01 - 06 - 2025                                                                  நாள் :  -  - ௨௦௨



தமிழ் வளர்த்த செவ்வேள்

     தேவாரத் திருமுறைகளை நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் என்பவராவார். அவர் திருஞானசம்பந்தர் மீது அளவற்ற பக்தி கொண்டவர். திருஞானசம்பந்தரின் பாடல்களை இறைவனை அடைவதற்குரிய பதிகப்பெருவழி என்று கூறியவர். திருஞானசம்பந்தர் மீது திருவந்தாதி, திருச்சண்பை திருவிருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை போன்ற நூல்களை இயற்றியவர். அவர் தமது ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் திருஞானசம்பந்தரின் அருட்செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

     “ அணங்கமர் யாழ்முரித்து ஆண்பனை பெண்பனையாக்கி அமண்
       கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
       பிணங்கலை நீரெதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோடு
       இணங்கிய மாடச் சிரபுரத் தான் தன்னிருந் தமிழே”

     என்பது அப்பாடல்.

    யாழ்முரித்தல், ஆண்பனையைப் பெண்பனையாக்கல், அமணர்களைக் கழுவேற்றுதல், விடந்தீர்த்தல், மறைக்கதவம் அடைத்தல், ஏடு ஆற்றில் எதிரோடச் செய்தல் என்று இங்கு தாம் சுட்டிக் காட்டிய அருட்செயல்கள் யாவும் திருஞானசம்பந்தரின் தமிழால் நிகழ்ந்தவை என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடுகிறார்.

  திருஞானசம்பந்தரை முருகப்பெருமானின் வடிவம் என்று இலக்கியங்கள் குறிப்பிடுவதற்கு நம்பியாண்டார் நம்பிகளின் சொல்லும் முக்கியமான காரணமாகும்.

    அருணகிரிநாதருக்கு முன்பே கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப்பரணி நூலில் இக்கருத்தைக் கதைவடிவில் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

   தக்கனின் வேள்வியை சிவபெருமான் ஆணைக்கிணங்க பைரவக் கடவுள் அழித்ததைப் பாடும் தக்கயாகப்பரணியில் ‘கோயில் பாடியது’ என்று ஒரு பகுதியுள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் அருட்செயல்களை முருகப்பெருமான் செய்த அருட்செயல்களாகவே அமைத்து ஒட்டக்கூத்தர் பாடியுள்ளது கவனிக்கத்தக்கது.

     “வருகதை தெய்வமகள் என்மருமகள் வள்ளி வதுவை
      மனமகிழ் பிள்ளை குமரன் மதுரையில் வெல்லும் இனிய
      ஒருகதை சொல்லு! தவள ஒளிவரி செவ்வி முளரி
      ஒளிதிகழ் அல்லி கமழும் ஒருமனை வல்லி எனவே”

     என்பது ஒட்டக்கூத்தரின் பாடல்.

     மலைமகள் பார்வதியும் கலைமகள் சரசுவதியும் இனிதமர்ந்து உரையாடிக் கொள்வது போன்ற காட்சியுடன் இப்பாடல் தொடங்குகிறது.

     “வெண்தாமரையில் அமர்ந்திருக்கும் கலைமகளே! தெய்வமகளும் எனக்கு மருமகளுமான வள்ளி என்னும் பெயருடையவளை விரும்பி மணஞ்செய்த என் பிள்ளை முருகன், மதுரையில் சமணரோடு வாதுசெய்து வென்ற கதை ஒன்று உண்டல்லவா… அதை எனக்குச் சொல்லு, கேட்க வேண்டும் போலுள்ளது” என்று பார்வதிதேவி கேட்டதாகவும் உடனே கலைமகளும் அவ்வரலாற்றை கூறியதாகவும் அப்பகுதி அமைந்துள்ளது.

     இதில் ஒட்டக்கூத்தர் மதுரையில் அனல்வாது, புனல்வாது செய்து திருஞானசம்பந்தர் சமணர்களை வென்ற வரலாற்றைப் பேசுகிறார். அதனை அவர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

     திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டிய மன்னன் முன்னிலையில் அனல்வாது, புனல்வாது செய்து சமணர்களை வென்ற வரலாற்றைப் பேசும்பொழுது அதனை தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் மீது ஏற்றிப்பாடுகிறார். எனவே முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக உலகில் எழுந்தருளி சமணத்தை வென்று தமிழ்நெறியை, திருப்பதிக நெறியை உலகிற்கு எடுத்துரைத்தார் என்பது ஒட்டக்கூத்தர் கூறவரும் செய்தி என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

     இதுமட்டுமன்றி தக்கயாகப்பரணியின் மற்றொரு அமைப்பும் இக்கருத்தை உறுதிசெய்கின்றது. கடவுள் வாழ்த்து பாடி இறைவனை வணங்கிவிட்டு தங்கள் நூலைத் தொடங்குவது பழந்தமிழ்ப் புலவர்களின் மரபு. ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியின் கடவுள் வாழ்த்தில் பைரவக் கடவுளைக் காப்பாக வைத்து முதற்பாடலை அமைத்துள்ளார். தக்கனின் வேள்வியை அழித்த நாயகர் என்பதால் அவர் முதன்மை பெறுகிறார் என்று கொள்ளலாம். தொடர்ந்து உமாபாகர், விநாயகப்பெருமான், முருகப்பெருமான், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வருக்கான வாழ்த்துப்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் சிவபெருமான், விநாயகப்பெருமான் என்று வாழ்த்திப் பாடல் பாடி வந்தவர் முருகப்பெருமானுக்கு அடுத்து திருஞானசம்பந்தருக்கு வாழ்த்துப்பா பாடுகிறார். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்ததும் ஒட்டக்கூத்தருக்கு தமிழ் விரகரான திருஞானசம்பந்தரே நினைவுவருகிறார். எனவே அவரை வாழ்த்திவிட்டு நூலைத் தொடங்குகிறார். இதில் முருகப்பெருமானும் திருஞானசம்பந்தரும் இணையிடம் பெறுவதைக் குறிப்பால் உணரமுடிகிறது.

     தமிழ்க்கடவுள் முருகப்பெருமானே திருஞானசம்பந்தர் என்ற முதல் இலக்கியப்பதிவு, பொது ஆண்டுக்குப் பின் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியே என்று ஆய்வாளர் முனைவர் சு.வேங்கடராமன் கூறுகிறார். அதனையே ஒட்டக்கூத்தருக்குப் பின்தோன்றிய அருணகிரிநாதரின் திருப்புகழ், குமரகுருபரர், பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் நூல்கள் போன்றவை பின்பற்றின என்பதும் நினைக்கத்தக்கது.

(தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment