பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 21                                                                   இதழ் -
நாள் : 18-09-2022                                                     நாள் : -௦௯- ௨௦௨௨

ஆத்திசூடி (ஔவை)


இணக்கமறிந்து இணங்கு

உரை
     ஒருவனை நட்புபொள்ளும்பொழுது அவனது நட்பைப் பலவாறு ஆராய்ந்து நட்புசெய்க.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 19
     செய்யபுகழ் விக்கிரமா தித்தனொரு தட்டாரப்
     பைய லுறவுபற்றிப் பட்டதனால் – வையம்
     மணக்குஞ்சீர்ப் புன்னை வனநாதா நீயும்
     இணக்க மறிந்திணங்கு

உரை
     உலகெல்லாம் புகழ்பாடும் புன்னைவன நாதனே! மிகுந்த புகழுடைய அரசன் விக்கிரமாதித்தன் ஒரு தட்டாரனுடன் நட்புறவு கொண்டதனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டான். அதனால் நீயும் ஒருவனுடன் நட்புகொள்ளும்பொழுது நன்கு ஆராய்ந்து நட்புகொள்க.

விளக்கம்
     சீர் – புகழ், பெருமை. வையம் மணக்கும் சீர் – உலகெல்லாம் புகழ்பரப்பி நிற்கும் என்க. பையல் – பையன் என்பதை சிறுமை கருதி பையல் என்றார்.  பட்டதனால் – துன்பப்பட்டதனால். இணக்கம் – வாழ்வினும் தாழ்வினும் வேறுபாடின்றி உள்ளத்தால் ஒத்த பண்புடையராயிருத்தல். அந்தப் பண்புடையாரிடத்து இணங்கு என்பதை இணக்கமறிந்து இணங்கு என்றார். திருவள்ளுவரின் ‘நட்பாராய்தல்’ (அதிகாரம் 80) இதனுடன் நோக்கத்தக்கது.

விக்ரமாதித்தன் கதை
     விக்ரமாதித்தன் கூரியகுத்தியுடைய ஓர் அரசனாயிருந்தும் விசயன் என்னும் தட்டான் ஒருவனைத் தனக்குந் சிறந்த நட்பாளனாகக் கொண்டு நடந்தான். அவன் மந்திரியாகிய பட்டி என்பவன் இதனை அறிந்து தட்டானுறவு தப்பாது தீங்கு பயக்கும் என்று தடுத்தும் தீவினையனுபவிக்கும் ஊழ்வசத்தால் அரசன் கேட்கவில்லை. அரசன் அத்தட்டான் கற்றிருந்த இந்திரசாலம், மகேந்திரசாலம் என்னும் வித்தைகளை அவனிடத்திலே கற்றுக்கொண்டு, தான் கற்றிருந்த பரகாயப்பிரவேசவித்தையை அத்தட்டானுக்குக் கற்பித்தான். தட்டானோ அரசனை வஞ்சித்து அரசைத் தான் அனுபவிக்கவேண்டும் என்று சமயம் பார்த்திருந்தான்.

இப்படியிருக்கும் நாளிலே அரசன் மந்திரியைவிடுத்துத் தனியே சென்று வேட்டையாடும்படி காட்டிற் போயிருந்தான். இதுவே சமயமென்று தட்டானும் அக்காட்டினை அடைந்தான். பின் அரசன் தட்டான் என்னும் இருவருங் கூடி வேட்டையாடிக்கொண்டு ஒரு குளக்கரையிலே நின்ற ஓர் ஆலமரத்தின் நிழலை அடைந்தார்கள். அரசன் ஆயாசத்தினாலே தட்டான் மடியிலே தலையை வைத்துப் படுத்துக்கொண்டு மேலே பார்த்தான். அவ்வாலமரத்திலே ஆணும் பெண்ணுமாக இரண்டு கிளிப்பறவைகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தன. அப்போது ஆண்கிளி சடிதியாக இறந்துவிடப் பெண்கிளி அதன் பிரிவாற்றாது மிகவருந்திற்று, அதனைச் சீவகாருண்ணியமுடைய அரசன் பார்த்துப் பெண்கிளியின் துயரைத் தீர்க்கக்கருதிப் பரகாயப்பிரவேசவித்தையினாலே தன்னுடலை விடுத்து ஆண்கிளியினுடலிற் பிரவேசித்தான் உடனே ஆண்கிளி எழுந்து பெண்களியை மகிழ்வித்தது. அரசனுடல் கிடந்தது. தட்டானும் சமயம் வாய்த்தது என்று தனக்கு அரசன் கற்பித்த பரகாயப்பிரவேசவித்தையைக் கொண்டு அரசனுடலிலே புகுந்து பட்டணத்தையடைந்தான். இவற்றைக் குறிப்பினால் அறிந்த மந்திரி அரசன் மனைவியர் கற்புக்குப் பங்கம்வாராது உபாயஞ்செய்து கொண்டான். கிளியுடலிற் பிரவேசித்த அரசன் மகதநாட்டிலே போய் ஒரு வேடன் வலையிலகப்பட்டு பின் ஒரு செட்டிக்கு விற்கப்பட்டு ஒருதாசியின் விலக்காரத்திலே வருந்திக் கிளியுருநீங்கித் தன்னுருவம்பெற்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
     ”ஆராய்ந்து நட்புகொள்க“ என்பது பாடலின் மையக்கருத்தாகும்.



( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment