இதழ் - 80 இதழ் - ௮0
நாள் : 05-11-2023 நாள் : 0௫-௧௧-௨௦௨௩
தலையாலங்கானம்
தலையாலங்கானம் பண்டை நாளில் ஒரு பெரும் போரைக் கண்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் பகையரசரை வென்று அழியாப் புகழ் பெற்ற களம் தலையாலங்கானம். 'இளையன்’ என்றும், ‘சிறியன்’ என்றும் என்னை இகழ்ந்துரைத்த சேர சோழ மன்னரைத் தாக்கித் தகர்த்துச் சிறை பிடித்து மீள்வேன் என்று செழியன் கூறிய வஞ்சினப் பாடல் புறநானூற்றிலே காணப்படுகின்றது. சேர சோழ மன்னர்க்குக் குறுநில மன்னர் ஐவர் துணைபுரிந்தனர். இரு திறத்தார்க்கும் தலையாலங்கானத்தில் நிகழ்ந்த கடும் போரில் செழியன் வென்றான். எழுவரும் தோற்றனர்.
புவிச் செல்வமும், புலமைச் செல்வமும் வாய்ந்த நெடுஞ்செழியனைப் புலவர்கள் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். செழியனது ஆன்ற மதிப்பிற்குரியராயிருந்த மாங்குடி மருதனார் அம்மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து மதுரைக் காஞ்சி பாடினார். நற்றமிழ் வல்ல நக்கீரர் அவன்மீது நெடுநல்வாடை பாடினார். இங்ஙனம் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தமிழ் இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்றான்.
இமய மலையில் புலிக்கொடியேற்றிய கரிகாலன் வழிவந்த சோழர்கள் பல்லவ மன்னர்க்கு ஆறு நூற்றாண்டுகளாக அடங்கியிருந்தார்கள். அந்த நிலையில் பல்லவ மன்னன் அபராசிதன் என்பவன் கங்கவாணனைத் துணைக் கொண்டு பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றங் கரையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பல்லவன் படைக்கும், பாண்டியன் சேனைக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கங்க அரசன் வரகுண பாண்டியனாற் கொல்லப்பட்டான். இங்ஙனம் வீரப்போர் புரிந்து வீழ்ந்த கங்கவாணனுக்குத் தமிழ் நாட்டார் நாட்டிய வீரக்கல், இன்று திருப்புறம் பயத்தில் ஒரு கோவிலாக விளங்குகின்றது. அப்போரில் பல்லவன் வெற்றி பெற்றான். ஆயினும், அது பெயரளவில் அமைந்ததேயன்றிப் பயன் அளித்ததாகத் தோன்றவில்லை.
பல்லவர் ஆட்சி நிலை குலைவதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் சோழ மண்டலத்தில் நிலை பெறுவதற்கும், காரணமாயிருந்த திருப்புறம்பயப் போர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். அப்போரின் விளைவாகத் தஞ்சை மாநகரில் ஆதித்த சோழன் மணி முடி சூடி அரசாளும் பெருமை எய்தினான். அவன் வழி வந்த பெருமன்னர் தஞ்சைச் சோழர் என்று பெயர் பெற்றுத் தமிழ் நாட்டுக்கு ஏற்றமும் தோற்றமும் அளிப்பாராயினர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment