பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 54                                                                                           இதழ் -
நாள் : 07-05-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
 
 
ஊரும் தொழிலும்
 
    பயிர்த் தொழிலே பழந்தமிழ் நாட்டில் பழுதற்ற தொழிலாகக் கருதப்பட்டு வந்தது. எனினும், கைத்தொழிலும் பல இடங்களிற் சிறந்து விளங்கி வந்திருக்கிறது. நெய்யும் தொழில் தமிழ்நாட்டுப் பழந்தொழில்களில் ஒன்றாகும். 
 
    பட்டாலும், பருத்தி நூலாலும், கம்பளத்தாலும் நேர்த்தியான ஆடை நெய்ய வல்ல குலத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் தொழில்கள் நிகழ்ந்த இடங்களைச் சில ஊர்ப்பெயர்களால் அறியலாம்.
 
    கூறை என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு கூறை நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது. 
 
    நெசவுத் தொழிலைச் செய்யும் வகுப்பார் சாலியர் எனப்படுவர். அவர்கள் சிறப்புற்று வாழ்ந்த இடங்கள் ஊர்ப் பெயர்களால் விளங்கும். தஞ்சாவூருக்கு அருகே சாலிய மங்கலம் என்னும் ஊர் உள்ளது. அங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைபெறுகின்றது. இவ்வாறு செய்யும் தொழில் அடிப்படையிலும் தமிழக ஊர்ப்பெயர்கள் வழங்கிவருவதைக் காணமுடிகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment