இதழ் - 203 இதழ் - உ௰௩
நாள் : 18 / 10 / 2026 நாள் : க௮ / ௰ / ௨௰உ௬
சைவ சமயத்தில் ஆன்ற பெருமையுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே. மேலும் திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதி யடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை "ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண் துறை” என்று போற்றினார் சேக்கிழார். அத்தலம், வட மொழியில் கோமுத் என்று வழங்கும் தீச்சுரம் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக்கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று 'சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை' என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும்.
சாத்தனூர் என்பது இப்பொழுது திருவாவடுதுறைக் கருகே ஒரு சிற்றூராக உள்ளது. அவ்வூரில் எழுந்த ஆவடுதுறை என்னும் சிவாலயம் பல்லாற்றானும் பெருமையுற்றமையால், கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று கொள்ளலாகும். மேலே குறித்த திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தில், "மற்றும் துறை யனைத்தும் வணங்குவோமே" என்று பாடியுள்ளமையால் இன்னும் சில துறைகளும் உண்டு என்பது பெறப்படும். அவற்றுள் திருமாந்துறையும், திருச்செந்துறையும். திருப்பாற்றுறையும் சிறந்த தலங்களாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment