பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 20                                                                   இதழ் - ௨௦
நாள் : 11-09-2022                                                      நாள் : -௦௯- ௨௦௨௨

 

ஆத்திசூடி (ஔவை)


இடம்பட வீடிடேல்

உரை
  கையிலுள்ள பொருள் கெடும்படி வீட்டினை அளவால் பெரிதாகக் கட்டாமல் இரு.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 18
     நித்தியமாம் வீட்டுநெறி யிலிடம் பாடல்லாற்
     பொய்த்தவின்ப வீட்டிற் பொருளடையா - தத்தம்
     நடையறியும் புன்னைவன நாதனே பூமி
     இடையிடம்ப டவ்வீ டெடேல்


உரை
     உலகியல், மெய்யியல் நடையினை அறியும் அறிவார்ந்த புன்னைவனநாதனே! உயிர்கள் நிலைபேறுடைய வீடுபேற்றிற்கான நெறியில் சென்று மெய்ப்பொருளாகிய முத்தியை அடைய இயலும். அஃதல்லாது நிலைபேறற்ற உலகியலின்ப நெறியில் அம்மெய்ப்பொருள் வாய்க்காது. எனவே உலகினிடை வாய்க்கும் பொருளின்ப வாழ்வினைத் தேர்ந்தெடுக்காதே.

விளக்கம்
     உலகியல் நெறி, மெய்யியல் நெறி என்ற இரு நெறிகளையும் உணரும் அறிவுடையவர் புன்னைவனநாதன் என்பதை ‘தத்தம் நடையறியும் புன்னைவன நாதனே’ என்றார். வீட்டுநெறி – முத்திநெறி. அதுவே உயிர்களுக்கு நிலைபேற்றை அளிக்குமாதலால் ‘நித்தியமாம் வீட்டுநெறி’ என்றார். இடம் – பொருள். இடம்பாடு – பொருள் அறிதல். இன்று இன்பம் தந்து நாளை துன்பம் பயக்கும் என்பதால் உலகியல் இன்பமளிக்கும் பொருட்களை ‘பொய்த்த இன்பவீடு’ என்றார். பொய்த்த - நிலையற்ற.
 
     ஔவையின் ஆத்திசூடியில் இடம்பட வீடிடேல் என்றிருக்க இராமபாரதியின் ஆத்திசூடி வெண்பாவில் இடம்பட வீடெடேல் என்றுள்ளது.

கருத்து
     உலகினிடை வாழும்பொழுது மெய்ப்பொருள் வாழ்விற்கான வாழ்வினை வாழ்க என்பது பாடலின் மையக்கருத்து.


( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment