இதழ் - 71 இதழ் - ௭௧
நாள் : 03-09-2023 நாள் : 0௩-0௯-௨௦௨௩
பகுபதம்
பகுபதம்
பிரித்தால் பொருள் தரக்கூடிய சொல் பகுபதம் (பகுபதம் - பிரிக்கவியலும் சொல்) எனப்படும். பகுதி, விகுதி, இடைநிலை என பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும் வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச் சொற்களும் பகுபதங்கள் ஆகும்.
குறிப்பு - இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆகாது.
பகுபதத்தின் வகைகள்
பகுபதம் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரு வகைப்படும்.
- பெயர்ப்பகுபதம்
- பொருள்
- இடம்
- காலம்
- சினை
- குணம்
- தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம்.
பொருட்பெயர்ப்பகுபதம்
- ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பகுபதம் பொருட்பெயர் பகுபதம் எனப்படும்.
- பொன்னன்=பொன்+ன்+அன்
பொன் என்னும் பொருட்பெயர் அடியாகப் பிறந்தது.
இடப்பெயர்ப் பகுபதம்
- இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர் பகுபதம் ஆகும்.
- ஊரன் = ஊர் + அன்
காலப்பெயர்ப் பகுபதம்
- நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப்பெயரின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப்பெயர் பகுபதங்கள் எனப்படும்.
- ‘கார்த்திகையான்’
சினைப் பெயர்ப் பகுபதம்
- சினை என்றால் உறுப்பு என்று பொருள்படும். உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.
- கண்ணன்=கண்+ண்+அன்
பண்புப் பெயர்ப்பகுபதம்
- ஒரு பண்பைக் குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் பண்புப் பெயர்ப் பகுபதம் எனப்படும்.
- கரியன்=கருமை+அன்
தொழிற்பெயர்ப்பகுபதம்
- தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச்சொற்கள் தொழிற்பெயர் பகுபதங்கள் எனப்படும்.
- நடிகன்=நடி+க்+அன்
வினைப்பகுபதம்
- பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாக பகுக்கப்படும் வினைமுற்று வினைப் பகுபதம் எனப்படும்.
- படித்தான் = படி + த் + த் + ஆன்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment