இதழ் - 135 இதழ் - ௧௩௫
நாள் : 24- 11 - 2024 நாள் : ௨௪ - ௧௧ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
குலோத்துங்க சோழனின் அரசவையில் அவைக்களப்புலவராக இருந்தவர்களுள் ஓட்டக்கூத்தரும் ஒருவர் . இவருக்குத்தன் புலமையின் மேல்செருக்கு வந்தது. இதனை அறிந்த ஔவை அச்செருக்கினை நீக்கி, ஒட்டக்கூத்தரின் பெருமையும் சிறப்பினையும் தமிழ் உலகம் என்றும் மறவாது இருக்க வழி செய்ய வேண்டும் என எண்ணினார்.
அவையின்கண் இருந்த ஒட்டக்கூத்தரை விளித்த ஔவை தன் கைகளினால் சில முத்திரைகளைக் காட்டி, இவை குறிக்கும் மெய்ப்பொருள்கள் யாவை எனக் கூறுமாறு கேட்கிறார். போட்டியினை ஏற்றுக் கொண்ட ஓட்டக்கூத்தர் அதற்குப் பதில் பாடலாகச் சிற்றின்பம் தொணிக்கும்வண்ணம் பாடலைப் பாடினார் .
சினம் கொண்ட ஔவை நான் மெய்ப்பொருளை விளக்கிக் கூறும்படி சொன்னால் நீங்கள் சிற்றின்பம் தொணிக்கும் பாடலைப் பாடியுள்ளீர்கள் எனக் கூறி அம்முத்திரைகளுக்கு உரிய பாடலைப் பாடுகிறார். நாணித் தலை குனிகிறார் ஒட்டக்கூத்தர்.
"ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே ணும்அன்னம் இட்டுண்மின் – தெய்வம்
ஒருவனே என்றும் உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்"
அதாவது, நம்மை நாடிப் பிச்சை கேட்டு வந்தவர்களுக்கு அதாவது இரந்து வந்தவர்களுக்கு, கொடுத்து உதவுங்கள். அது மட்டும் அல்ல அனைவரும் அறத்தினைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் உணவு உண்ணும் முன் உண்ணும் சோற்றில் கொஞ்சமாவது அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு உண்ணுங்கள். இவற்றினைச் செய்து வாருங்கள் .இதன் மூலம் தெய்வம் ஒன்றே என்பதனை உணரும் வல்லமை கொள்வீர்கள் இதுவே அறுவதற்குரிய ஐந்து வினைகளும் அறுந்து போகும் வழியாகும் எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பாடல் மூலம் ,
- நம் முன்னோர் பழக்கவழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதனை உணரக்கூடியதாக உள்ளது.
- இரந்து வரும் மனிதர் தற்காலத்தில் குறைந்துள்ளமையால் இரந்து வரும் பிற உயிரினங்களுக்கு நாம் உணவையும் தண்ணீரையும் அளிக்க வேண்டும்.
- இரக்காமலே பிற உயிரினங்கள் மேல் இரக்கம் கொண்டு உணவை அளிக்க வேண்டும் ; பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும்.
- எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார் என்பதனை இச்செய்கைகள் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
- நாம் நம் ஐம்புலன்களைக் கொண்டு செய்யும் பாவங்கள் இவற்றினால் இல்லாதொழிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்ப்புலமை மிக்க தமிழ்ப் புலவரான ஔவையின் வாக்கினை நாமும் பின்பற்றுவோம்.
வரும் கிழமையும் ஔவை வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment