இதழ் - 105 இதழ் - ௧0௫
நாள் : 28-04-2024 நாள் : ௨௮-0௪-௨௦௨௪
திருவேங்கடநாதன்
பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் மாதைத் திருவேங்கடநாதன் என்பவர் நாயக்கரது பிரதிநிதியாக நெல்லை நாட்டின் ஆட்சிப்புரிந்து வந்தார். அவர் கலை வாணர்களைப் பெரிதும் ஆதரித்தவர். இலக்கண விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் அவரது கொடைத் திறத்தினை நாவாரப் புகழ்ந்துள்ளார். மக்களின் நன்மையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அந்நல்லாராகிய மன்னனின் பெயர் திருநெல்வேலிக்குத் தென்மேற்கிலுள்ள திருவேங்கடநாதபுரம் என்னும் ஊரால் விளங்குகின்றது.
நாயக்கர்
விஜயநகரப் பெரு மன்னர்களின் ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. ஆந்திரத் தலைவர் பலர் தம் பரிவாரங்களோடு தமிழ்நாட்டிலே குடியேறி வாழத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் தென்னாட்டிற் போந்த வடுகத் தலைவர்களில் ஒருவர் எட்டப்ப நாயக்கர். அவர் பெயரால் அமைந்த ஊர் எட்டயபுரம் ஆகும். இவ்வண்ணமே கொடைக்கானல் மலைக்குப் போகும் வழியிலுள்ள அம்மை நாயக்கனூர் ஒரு நாயக்கன் பெயரைக் கொண்டுள்ளது. இன்னும் போடி நாயக்கனூர் முதலிய ஊர்களின் பெயரிலும் தென்னாட்டில் வந்து சேர்ந்த வடுகத் தலைவரின் பெயர் விளங்கக் காணலாம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment