இதழ் - 111 இதழ் - ௧௧௧
நாள் : 10-06-2024 நாள் : ௧0-0௬-௨௦௨௪
சோழ நாட்டு மன்னர்
விசயாலயன்
பல்லவர் ஆட்சி நிலைகுலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர். விசயாலயன் பெயர் தாங்கிய ஊர் ஒன்றும் இல்லை யென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழீச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்தது என்பர்.
ஆதித்தன்
விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிடமாயிருந்த தொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராஜ கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. தஞ்சை நாட்டுப் பண்டார வாடைக்கு அண்மையில் இராஜகிரி என்ற சிற்றூர் உள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள அவ்வூர் முன்னாளில் இராஜகேசரி சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. இராஜகேசரிப் பெயரே இராஜகிரி என மருவிற்று என்பர். இப்போது இராஜகிரி முகமதியர் வாழும் ஊராக இருப்பினும், பழைய கோவில்களின் குறிகளும் அடையாளங்களும் அங்குக் காணப்படுகின்றன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment