இதழ் - 141 இதழ் - ௧௪௧
நாள் : 12 - 01 - 2025 நாள் : ௧௨ - ௦௧ - ௨௦௨௫
ஔவை ( கி.பி. 12 )
ஔவையின் அறநூல்களில் ஒன்று கொன்றைவேந்தன். இதில் 91 அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ஒரு சில அறக்கருத்துகளைப் பார்க்கலாம்.
தொடங்கும் போது,
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
என்றே தன் கருத்தை முன் வைக்கிறார். அதாவது, நம்மைப் பெற்றெடுத்த தாயும் தந்தையுமே நம் தெய்வம் என்பதைக் கூறியுள்ளார்.
மேலும்,
“ஏவா மக்கள் மூவா மருந்து”
என்பதன் மூலம், நம் சொல்லுக்காகக் காத்திருக்காமல் தாய்,தந்தையருக்குச் செய்யவேண்டிய பணியினை அறிந்து, தாமே செய்கின்ற குழந்தைகள் அழியாத செல்வத்தை ஒத்தவர்கள் என்கிறார்.
“கற்புஎனப் படுவது சொல்திறம் பாமை”
என்ற அடி மூலம் அக்காலத்தில் புரட்சியைச் செய்துள்ளார் ஔவை.
கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது. எப்படியெனின், சொன்ன சொல்லைக் காப்பாற்றலே கற்பு என்கிறார்.
முடிக்கும் போது,
“ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்”
என்கிறார். கற்றல் இல்லாதவர்கள் அதாவது, நாள்தோறும் கற்றுக் கொள்ளாதவர்கள், கற்றதைச் செயல்படுத்தாதவர்களிடையே நல்லுணர்வும் ஒழுக்கமும் இருக்காது என்பதை அறியத் தருகிறார்.
ஔவையின் கருத்தினை நாமும் பின் தொடரலாம்.
வரும் கிழமையும் ஔவை வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment