பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 15                                                                 இதழ் -
நாள் : 07-08-2022                                                   நாள் :
௦௭-௦-௨௦௨௨

   

மாத்திரை

     மாத்திரை எனப்படுவது நாம் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இயல்பாகவே கண் மூடித்திறந்து கொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.

தமிழில் ஒவ்வொரு எழுத்தும் ஒலிக்க வேண்டிய நேரத்துக்கு ஓர் அளவு உண்டு.

     உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்  - ஒரு மாத்திரை
     உயிர்நெடில், உயிர்மெய்நெடில்  - இரண்டு மாத்திரை
     மெய்யெழுத்து, ஆய்தஎழுத்து   -  அரை மாத்திரை 

சான்று
     அ – 1 மாத்திரை (உயிர்க்குறில்)
     ம் – ½ மாத்திரை (மெய்யெழுத்து)
     மா – 2 மாத்திரை (உயிர்மெய்நெடில்)

      “இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை"  (நன்னூல் நூற்பா எண்.100) என்று பவணந்தி முனிவர் விதி வகுத்திருக்கின்றார்.

அதேபோல,
     “கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
      நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டஆறே”
  

(தொல். நூன்மரபு. நூற்பா எண். 7) என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

     கண்ணிமைப் பொழுதும் கைநொடிப் பொழுதும் மாத்திரை எனப்படும். இன்ன இன்ன எழுத்தை இவ்வளவு இவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பது மொழியின் அறிவியல் நிலையை எடுத்துக்காட்டுகிறது. இச்சிறிய மணித்துளி அளவையும் பாகுபாடு செய்து கூறியிருப்பதைப் பார்ப்போம்.

    “உன்னல் காலே ஊன்றல் அரையே
     முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே.”

     நினைப்பது கால் மாத்திரையாம்: இரண்டு விரல்களை ஊன்றல் அரை மாத்திரையாம்: இரண்டு விரல்களை முறுகல் முக்கால் மாத்திரையாம்: விடுத்தல் ஒரு மாத்திரையாம்.

 
( தொடர்ந்து கற்போம் . . . )

 

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

 

No comments:

Post a Comment