பக்கங்கள்

இவர் ஓர் ஆள்தான்

இதழ் - 183                                                                        இதழ் - ௧
நாள் :  29 - 11 - 2025                                                      நாள் :    - ௨௦௨௫ 



இவர் ஓர் ஆள்தான்
 
    
    திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்ந்தோர் பலர். அவர்களுள் உலகறிந்த ஒருவர் உ.வே.சாமிநாதர் அவர்கள். மகாவித்துவான் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் அவரிடம் தியாகராச செட்டியார் என்பவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை பாடம்கேட்டு வந்தார். (தியாகராச செட்டியார் பிற்காலத்தில் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவருக்குப் பின்னர் அப்பணியில் சேர்ந்தவர் உ.வே.சாமிநாதர் அவர்கள்). அங்ஙனம் அவர் பாடம் கேட்குங் காலத்தில் கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இயற்றிய பிரபுலிங்கலீலையைப் பாடங்கேட்டார். 

    மகாவித்துவான் பாடஞ்சொல்லச் சொல்ல அந்நூலின் சொற்சிறப்பாலும் பொருட்சிறப்பாலும் தியாகராச செட்டியார் ஈர்க்கப்பட்டார். நூல் தந்த இன்பத்தில் திளைத்திருந்தவர் மகாவித்துவானிடம் “இவர் ஓர் ஆள்தான் போலிருக்கிறது!” என்றார். 'மிகச் சிறந்த புலவர்' என்ற கருத்தில் அவர் இங்ஙனம் கூறினார். ஆனால் மகாவித்துவான் அவர்களுக்கு இச்சொல் மரியாதையாகத் தெரியவில்லை. உடனே “என்னப்பா இப்படிச் சொல்லிவிட்டாய்? சிவப்பிரகாச சுவாமிகள் யாரென்று தெரியுமா உனக்கு? அவருடைய சொல்நயம் யாருக்கு வரும்? அவருடைய நால்வர் நான்மணிமாலையின் சுவையில் ஈடுபட்ட சிவஞானசுவாமிகள் அந்த பிரபந்தத்தை சுவடியில் எழுதிச் சுருட்டித் தனது உருத்திராக்க கண்டிகையில் சூடிக்கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள். அத்தகைய சிறந்த புலவரை நீ “ஓர் ஆள்” என்று சொல்லலாமா?” என்று கடிந்துகொண்டார்.

    “நான் தவறாக எண்ணிச் சொல்லவில்லை ஐயா. அவர் சிறந்தவர் என்ற எண்ணத்தில்தான் அப்படிச் சொன்னேன். யாராவது கனவானோ தனவானோ அறிவாளியோ இருந்தால் எங்கள் ஊரில் 'இவன் ஒரு புள்ளி, இவன் ஓர் ஆள்' என்று சொல்வது வழக்கம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்” என்று தியாகராச செட்டியார் விளக்கம் அளித்தார்.

     “இருந்தாலும் நீ சொல்வதை வேறு யாரேனும் கேட்டால் உன் கருத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நீ புலவர்களின் அருமையை அறியாதவன் என்றுதான் நினைப்பார்கள்” என்று மகாவித்துவான் அறிவுறுத்தினார்.

     “அப்படியானால் நான் சொன்னதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் சொல்லக் கூடாது என்று தெரியாததனால் சொல்லிவிட்டேன். இனிமேல் கவனமாக இருக்கிறேன்” என்று தனது வருத்தத்தைப் புலப்படுத்தினார்.

     ஆள் என்பது திறமை, முயற்சி, உயர்வு என்னும் பொருள்களில் இன்றும் மக்கள் வழக்கத்தில் உள்ளதைக் காணலாம். “நல்லாள் இல்லாத குடி” (குறள், 1030) என்பது வள்ளுவர் சொல். “நல்ல ஆண்மகன் பிறவாத குடி” என்று பரிமேலழகர் இதற்கு உரைகாண்கிறார். ஆளுமை என்பது இன்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லாயிற்று.

பட்டினத்தார் காளத்திநாதர் மீது பாடிய பாடல் ஒன்றில்,
      “ வாளால் மகவறிந்து ஊட்டவல்லேன் அல்லேன் மாதுசொன்ன
        சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லேன் தொண்டுசெய்து
        நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன் நானினிச் சென்று
       ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே ”
என்று பாடுகிறார். 'ஆளாவது எப்படியோ?' என்பது அவரது பயன்பாடு. 

    சிறுத்தொண்டரையும் திருநீலகண்ட குயவனாரையும் கண்ணப்பரையும் குறிப்பிட்டு அவர்களைப் போல நான் ஆளாவது எப்படியோ என்று காளத்தியப்பரை வேண்டுகிறார் பட்டினத்தார். இது வடிவத்தைக் குறித்தத்தல்ல. பக்தித்திறத்தைக் குறித்தது.

    தியாகராச செட்டியார் பயன்படுத்திய 'ஆள்' என்னும் ஊர்வழக்கு 'திறன்' பற்றியது. ஆனால் பெரியவர்களைச் சொல்லும்பொழுது அப்படிச் சொல்லாதே என்பது  மகாவித்துவானின் கட்டளை.

( உ.வே. சாமிநாதர் அவர்கள் இயற்றிய வித்துவான் தியாகராச செட்டியார் நூல் கொடுத்த செய்தி )


முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment