பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 13                                          இதழ் - ௧௩

நாள் : 24-07-2022                                  நாள் : ௨௪-௦௭ - ௨௦௨௨
 
 

  

 
1. எருமையூர் – மைசூர்


     எருமை மாடுகள் மிகுந்திருக்கும் ஊர் இது. சங்ககாலத்திலும் இவ்வூரில் எருமை மாடுகள் மிகுதியாக இருந்தமைபற்றி இவ்வூரை எருமையூர் என்றனர். எருமை என்னும் சொல் ‘மை’ என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். எனவே எருமையூர், மையூர் என்னும் சொல்லாலும் வழங்கப்பட்டு வந்தது. மையூர் என்ற பெயர் மருவி பின்னாளில் மைசூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.


2. ஸ்ரீரங்கம் – திருவரங்கம்

     திருவரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. வடமொழியில் இத்தலம் ஸ்ரீரங்கம் என அழைக்கப்படுகிறது.


3. கசத்தாறு – கயத்தாறு

     கோதாண்ட ராமர் அணிந்த துளசி மாலையை அங்குள்ள நீரில் நாள்தோறும் கரைப்பதால் அந்நீர் கசப்பாக மாறியிருந்தது. அந்த ஊற்றே ஆறாக ஒடுவதாகவும், அதுவே கசந்த ஆறு, கசத்தாறு என்றும் பிற்காலத்தில் கயத்தாறு எனவும் மருவி வழங்கப்படுகிறது.


4. வெற்றிலைக்குன்று – வத்தலகுண்டு

 
     வத்தலக்குண்டு என்பது மரூஉப்பெயர். இப்பகுதி குன்றுப்பகுதியாக இருப்பதோடு, இங்கு வெற்றிலை அதிகம் விளைகிறது. எனவே இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். காலபோக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றது.


5. திருதவத்துறை – லால்குடி


     திருநாவுக்கரசர் அருளிய பண்டெழுவர் “தவத்துறை” என்ற சொற்றொடரில் உள்ள தவத்துறை என்பதே இத்திருத்தலத்திற்கு பெயர். பிற்காலத்தில் சான்றோர்களால் ‘திரு’ சேர்க்கப்பட்டுத் திருத்தவத்துறை என்று அழைக்கப்பட்டது.

     துருக்கிய மன்னன் மாலிக்காஃபூர் தமிழகத்தின்மீது படையெடுத்தபோது திருத்தவத்துறையை நெருங்கிய நேரத்தில் தூரத்திலிருந்து ஒரு கோபுரத்தை காண நேர்ந்தது. அச்சமயம் சப்தரீஷீஸ்வரர் திருக்கோயில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு வேலைகள் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த மாலிக்காஃபூர் அருகில் இருந்தவர்களிடம் அது என்ன லால் குடி? என்று உருது மொழியில் கேட்டான். ‘லால்’ என்றால் சிவப்பு என்றும், ‘குடி’ என்றால் கோபுரம் என்றும் பொருள். அவ்வாறு வினவிய அச்சொற்றொடரே இன்றளவும் நிலைத்து லால்குடி என வழங்கப்பட்டு வருகிறது.
 
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 
 
 
 
 


 

No comments:

Post a Comment