இதழ் - 186 இதழ் - ௧௮௬
நாள் : 28 - 12 - 2025 நாள் : ௨௮ - ௧௨ - ௨௦௨௫
சி. வை. தாமோதரம்பிள்ளை
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான சி வை தாமோதரன் பிள்ளைக்கு,
“இராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது. (1895)
தமிழ் தாத்தாவான உ.வே.சாமிநாதையரால்,
" தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே "
என்று புகழப் பெற்றார்.
இஃது மட்டுமன்றி,
"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே"
என மாயூரம் வேதநாயகம் பிள்ளையினால் பாராட்டப்பட்டுள்ளார்.
மேலும் பரிதிமாற் கலைஞர் இவரை,
"காமோதி வண்டர் கடிமலர்ந்தேன் கூட்டுதல்போ
னாமோது செந்தமிழி னனூல் பலதொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றுவெவர்
தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர் "
என்கிறார்.
இவ்வாறு அறிஞர்கள் பலர் இவரது புகழ் பாடியுள்ளனர்.
“தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும்
நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள்
அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” என்று தமிழில்
முழுமையாகக் கிடைத்த முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தைத் தாம்
பதிப்பித்ததன் காரணத்தைக் கூறியுள்ளார் சி வை தாமோதரன் பிள்ளை.
இவர் கலித்தொகை பதிப்புரையில், "ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு
அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப்
பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும்
சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ
அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும்
நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது
நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே!
தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா?
இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!" என்கிறார்.
மேலும் இவர், நூல் பதிப்பிப்பதில் உள்ள சிக்கல்களை, தடைகளை இவ்வாறு
கூறுகிறார். “சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல. மண்ணை
அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு
அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது.
ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே
அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு
நிற்கும்”
பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள், "சி.வை. தாமோதரம் பிள்ளையின்
சரித்திரம் தமிழ்ச் சரித்திரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழுக்குப் பல சேவைகளைப் புரிந்த தமிழறிஞர்களைப் போற்றுவோம்.
(வரும் கிழமையும் வருவார்…)
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020

No comments:
Post a Comment