இதழ் - 185 இதழ் - ௧௮௫
நாள் : 21 - 12 - 2025 நாள் : ௨௧ - ௧௨ - ௨௦௨௫
தோடுடைய செவியன் - 2
திருஞானசம்பந்தர் எந்தச் சூழலில் தோடுடையசெவியன் என்று தொடங்கி தனது முதற்பதிகத்தைப் பாடினார் என்பதை அறிந்து கொள்வது, அச்சொல்லின் பின்புலமாக நின்றியங்கும் பொருண்மையின் சிறப்பை நன்குணர வழிசெய்யும். சேக்கிழார் மிக விரிவாக அச்சூழலை எடுத்துக்காட்டுகிறார். அதன் சுருக்கம் இவண் காட்டப்படுகிறது.
சீர்காழியில் வாழ்ந்த அந்தணத் தம்பதிகளான சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை வளர்ந்து மூன்று வயது நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் நீராடுவதற்காக தோணியப்பர் கோயில் குளத்திற்குச் செல்லத் தயாரானார். பிள்ளை தானும் வருவதாகச் சொல்லி அடம்பிடித்தது. வேறுவழியின்றி சிவபாத இருதயர் பிள்ளையையும் கோயிற் குளத்திற்கு அழைத்துச் சென்றார். பிள்ளையைக் குளக்கரையில் அமர்த்திவிட்டு “எங்கும் செல்லக் கூடாது” என்று சொல்லிவிட்டு குளத்து நீரில் மூழ்கினார். தந்தையின் உரு மறைந்ததும் அச்சம்கொண்ட பிள்ளை “அம்மே! அப்பா!” என்று அழத்தொடங்கியது.
சிவபெருமான் விடையூர்தியில் உமையம்மையுடன் விரைந்து வந்து பிள்ளைக்குக் காட்சியளித்தார். பிள்ளை அழுவதைக் கண்ட இறைவன் அம்மையிடம் “துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டு” என்று ஆணையிட அம்மையும் அவ்வாறே செய்தார். அம்மையிடம் பாலுண்ட பிள்ளை உவமையிலாத கலைஞானங்கள் யாவும் வாய்க்கப் பெற்று ஞானசம்பந்தரானது.
திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் திருப்பெருமணநல்லூரில் அருள்பாலிக்கும் வெண்ணீற்று உமையம்மை மீது ஒரு பிள்ளைத்தமிழ் நூல் பாடியுள்ளார். கவிநயம் மிகுந்த அந்நூலில் “சிவபெருமான் புலிக்குட்டி ஒன்றிற்குப் பாலூட்டினார். உமையம்மை சிங்கக்குட்டி ஒன்றிற்குப் பாலூட்டினார்” என்னும் கருத்தமைய ஒரு செய்யுள் இயற்றியுள்ளார். யார் அந்த புலிக்குட்டி? யார் அந்த சிங்கக் குட்டி?
( அறிவோம் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment