பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 109                                                                                           இதழ் - ௧0
நாள் : 26-05-2024                                                                           நாள் : -0ரு-௨௦௨௪



ஔவை


        ஔவை என்றாலே நம் கண் முன்னே தெரிவது,  சிறிது வளைந்த உடலுடன் கைத்தடியை ஊன்றிய வண்ணம் நெற்றி நிறையத் திருநீற்றினைப் பூசி  நரைத்த கூந்தலுடன் உள்ள வயதான கிழவியின் உருவமே. ஆனால் இந்த இதழில் நாம்  சங்க காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்த ஔவை பற்றிப் பார்க்கலாம்.

        சங்ககாலத்தில் வாழ்ந்த இசைச் சமூகத்தினரைப் பல பெயர் கொண்டு அழைப்பர்.  பண்ணிசையுடன் பாடுபவர்கள் பாணர் எனப்பட்டனர். இவர்கள் பல வகையான இசைக் கருவிகளை முழக்கிக் கொண்டு ஊர் ஊராக நாடோடிகள் போன்று செல்பவர்கள். யாழ் இவர்களின் முதன்மையான கருவி ஆகும். பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர் ஆவார். பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர் எனப்படுவர். கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர் என அழைக்கப்பட்டனர்.

        கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஔவை  இளம் விறலி ஆவார்.  அழகும் இளமையும் அறிவும் வாய்த்த இளம் பெண் இவள். மை தீட்டிய விழிகளும், பிறை போன்ற நெற்றியும் பெற்றிருந்த இவள், அழகான ஆபரணங்கள் அணிந்தவளாகவும்  இருந்துள்ளாள். 

        சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவளது ஐம்பத்தொன்பது (59) பாடல்கள்  உள்ளன. அவற்றில் முப்பத்துமூன்று (33) பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் ஆகும். ஏனைய  இருபத்தாறு (26) பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் ஆகும். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவள் ஒன்பதாம் (9) நிலையில் உள்ளாள் என்பது இலக்கியங்கள் வாயிலாக சான்றோர் கண்ட முடிபு. 

(வரும் கிழமையிலும் ஔவை வருவாள்…)

   இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment