இதழ் - 184 இதழ் - ௧௮௪
நாள் : 07 - 12 - 2025 நாள் : ௦௭ - ௧௨ - ௨௦௨௫
தோடுடைய செவியன் - 1
சிவபெருமானின் உருவ அமைதிகளைக் கூறும்பொழுது தேவாரத் திருமுறைகள் அவரது அடிமுதல் முடிவரையிலான பல்வேறு குறிப்புகளை வழங்குகின்றன. நுதல்விழியன், கறைக்கண்டன், மதிசடையன், கங்கைகொண்டான், மான்மழு கையன், யானையுரிபோர்த்தவன், மாதோர்பாகன் என்பன அவற்றுள் மிகச்சில. அங்ஙனம் சிவபெருமான் குறித்து தோவரம் தரும் ஒரு குறிப்பு ‘தோடுடையசெவியன்’ என்பது. தேவாரத்தின் முதல் சொல்லே இதுதான் என்பது இவண் குறிப்பிடத்தக்கது. இச்சொல்லை அளித்தவர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான முதல்வரான திருஞானசம்பந்தர்.
சீர்காழியில் தோணியப்பர் குளக்கரையில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்டு திருஞானசம்பந்தர் பாடிய முதல் பதிகத்தின் முதற்சொல்தான் தோடுடையசெவியன் என்பது. ஞானம்வாய்த்த அக்கணம் திருஞானசம்பந்தரின் நாவுதிர்த்த முதற்சொல் என்பது இச்சொல்பெறும் கூடுதல் சிறப்பு.
‘தோடுடையசெவியன்’ என்பதற்கு காதில் தோடு அணிந்தவன் என்று பொருள்படும். தோடு என்பது காதணிகளுள் ஒன்று. காதணிகள் ஆண்கள் அணிவன, பெண்கள் அணிவன என பரிந்து நிற்கின்றன. பொதுவாக தோடு, குழை, கொப்பு, ஓலை, இலை, குவளை, வல்லிகை, மடல் என்று பல்வேறு வகையான காதணிகளை பண்டைய மக்கள் அணிந்திருந்த குறிப்புகள் கிடைக்கின்றன. தெய்வ உருவ அமைதிகளிலும் அவற்றை அணிவித்து இறைவேட்பர் மகிழ்ந்துள்ளனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. அத்தகைய ஒரு பதிவுதான் திருஞானசம்பந்தரின் ‘தோடுடையசெவியன்’ என்பது. இச்சொல்லின் பின்னால் புராணமும் பண்பாடும் கலையும் நின்றியங்குகின்றன. அவற்றை அறிதல் திருஞானசம்பந்தரின் இப்பதிவை இனிதுவிளங்க துணைசெய்யும்.
( அறிவோம் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment