பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 14                                                                 இதழ் - ௧௪
நாள் : 31-07-2022                                                   நாள் : ௩௧-௦௭-௨௦௨௨

   

1. கருந்திட்டைக்குடி – சுங்கந் தவிர்த்த சோழநல்லூர்
     கருந்திட்டைக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். முற்காலத்தில் கருந்திட்டைக்குடி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. குலோத்துங்கன் என்ற சோழமன்னன் இவ்விடத்தில் இவ்வூரிலிருந்த சுங்கச்சாவடியை அகற்றி மக்களுக்கு நன்மைச் செய்தார். ஆதலால் இவ்விடம் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்று மக்களால் வழங்கப்பட்டு வருகிறது.

2. மானாமதுரை - வானவன் மாமதுரை


     மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வானவன் மாமதுரை. வானன் சமூகத்தினர் ஆண்ட பகுதி வானவன் மாமதுரை ஆகும். இச்சமூகத்தினர் பழங்காலத்தில் சிற்றரசர்களாக இருந்து கொண்டு சேர, சோழ, பாண்டியர்களுக்கு விசுவாசிகளாக இருந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த பகுதி மருவி பிற்காலத்தில் மானாமதுரை ஆயிற்று.

3. மகுடஞ்சாவடி – மாக்டொனால்ட் சாவடி

      தென்னிந்திய இரயில் தடங்களில் முக்கியமான கிளை சங்ககிரி வழியாக கோழிக்கோடு வரை செல்கிறது.  இவ்வழித்தடத்தில் வரும் எர்ணாபுரம் என்ற இடத்தில் மெக்டோனால்டு என்பவர் கட்டிய சத்திரம் கிழக்கில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. அவருடைய பெயரையும் சேர்த்து மெக்டோனால்டு சவுல்ட்ரி (MCDONALD CHOULTRY) என வைக்கப்பட்டது.
 
     தற்போதும் இரயில் நிலையம், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் இவ்வூர் மக்டனால்டு சவுல்ட்ரி என்றே அழைக்கப்படுகிறது. மக்டனால்டு சவுல்ட்ரி என்ற ஆங்கிலப்பெயர் மகுடன்சாவடி என்று மருவியது. தற்போது இது மகுடஞ்சாவடி என்று அழைக்கப்படுகிறது.

4. தில்லை ஸ்தானம் – திருநெய்த்தானம்

      சோழநாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 52வது தலமாக திருநெய்த்தானம் போற்றப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூர் திருவையாறு பாதையில் திருவையாற்றுக்கு மிக அருகில் கிட்டத்தட்ட திருவையாறு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. சிவன் அபிஷேகப்பிரியர். காமதேனு தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் சிவபெருமானை அபிஷேகித்தது. இவர் ‘பசு நெய்யில் ஆடிய அப்பர்’ ஆதலால் நெய்யாடியப்பர் என்றும் அவா் வீற்றிருக்கும் இடம் நெய்த்தானம் என்றும் அழைக்கப்படுகிறது.

5. திருமணஞ்சேரி – எதிர்கொள்பாடி
 
      திருமணஞ்சேரி என்ற இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் பெயர் சிவபெருமானிடமிருந்து வந்தது. சேரி என்பது கிராமம் அல்லது குக்கிராமத்தைக் குறிக்கும். சிவபெருமான் இந்த இடத்தில் பார்வதியை மணந்தார். எனவே இந்த கிராமம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. 
 
     இந்த ஊரின் அருகே அமைந்த மற்றொரு பிரபலமான கோயில் எதிர்கோல்பாடி கோயில் என்பதாகும். மணமகனான சிவபெருமானை அவரது மாமனார் பாரத முனியால் வரவேற்கப்பட்ட இடம் இந்த எதிர்கோல்பாடி என்பதால், இவ்விரு ஊர்களைப் பொதுவாகக் குறிப்பிடும் வகையில் எதிர்கொள்பாடி என்று அழைக்கின்றனர். 
 
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment