இதழ் - 136 இதழ் - ௧௩௬
நாள் : 01 - 12 - 2024 நாள் : ௦௧ - ௧௨ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 136
“ உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் ”
விளக்கம்
ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை முகம் காண்பித்துக் கொடுத்துவிடும் என்பது இப்பழமொழியின் பொருளாகும். (அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற முதுசொல் இங்கு நினைக்கத்தக்கது)
“ உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் ”
உண்மை விளக்கம்
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.
வெள்ளம் வரும் காலத்தில் அதுவரும் இடங்களில் ஈரம் பட்டு விளங்குவதை நாம் காணலாம். அதுபோல கள்ளம் (நேர்மையற்ற தன்மை) உள்ள மனம் எப்படியேனும் அதை மறைக்க நினைத்தால் அது அவரின் முகத்தில் வெளிப்பட்டு விடுவதைக் காணலாம்.
அதாவது, வெள்ளம் வரும் போது ஈரம் படர்ந்த நிலை எவ்வாறோ அதைப் போன்றே அவரின் முகம் மனத்தின் தன்மையைக் காண்பித்துக் கொடுத்து விடும் என்பதை 'உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment