இதழ் - 115 இதழ் - ௧௧௫
நாள் : 07- 07 - 2024 நாள் : 0௭ - 0௭ - ௨௦௨௪
உ.வே.சாமிநாதர்… தமிழுலகம் நன்கு அறிந்த பெயர். தலைமுறை தலைமுறையாக வயதுவேறுபாடின்றி அவர்காலந்தொட்டு இன்றுவரை நம்மால் ‘தமிழ்த்தாத்தா’ என்று அழைக்கப்பெறுபவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ச்செயால்பாடுகளையும் அறிஞர்களையும் அறிவியக்கங்களையும் தமது எழுத்தில் பதிவு செய்தவர். அப்படியான அவரது இரண்டு நூல்கள் குறிப்பிடத்தக்கன. ஒன்று, ‘திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் சரித்திரம்’ என்ற நூல். மற்றொன்று உ.வே.சா. தனது வாழ்க்கையைக் குறித்து எழுதிய ‘என் சரித்திரம்’ என்ற நூல். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீன தமிழ்ப்புலவராக இருந்தவர். அவரிடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றவர் நமது தமிழ்த்தாத்தா.
தனது தமிழாசிரியருடைய வரலாற்றை இயல்பான உரைநடையில் உ.வே.சா. அவர்கள் இயற்றியுள்ளார். அதுதான் முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட ‘திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் சரித்திரம்’ என்ற நூல். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் பல்வேறு சிற்றிலக்கியங்களைப் பாடியிருந்தாலும் அவரது நூல் தொகையுள் அதிக எண்ணிக்கையைப் பெறுவன தலபுராணங்களாகும். மொத்தம் 22 தலபுராணங்கள் அவரால் இயற்றப்பட்டுள்ளன.
தலங்களின் பெருமையை, வரலாற்றை, தொன்மங்களை தமிழ்ச்சுவைபெருக வழங்கிய பெருமகனார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவர் பாடிய தலபுராணங்களுள் ஒன்றுதான் நாம் இன்று சிந்திக்கவுள்ள கும்பகோண புராணம். கும்பகோண புராணத்தை தமிழில் பாடி அவர் அரங்கேற்றிய வரலாறு சுவைமிக்கது. அவரது பக்தியும் தன்மானமும் கருணையும் வெளிப்பட்ட நிகழ்வு அது. கந்தபுராண, காஞ்சிபுராண அரங்கேற்றத்தில் ஏற்பட்ட தடையும் அது நீங்கிய திறத்தையும் கண்ட நாம் உடன் கும்பகோண புராணத்தின் அரங்கேற்றத்தையும் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.
அது 1865ஆம் ஆண்டு. கும்பகோணம் கல்லூரியில் தியாகராச செட்டியார் என்பவர் தமிழ்ப்பண்டிதராகப் பணியிலிருந்தார். உ.வே.சா அவர்கள் எழுதிய தியாகராச செட்டியார் வரலாற்றை வாசித்தால் அவர் மிகக் கறாரான தமிழ்ப்பண்டிதர் என்ற தோற்றம் நமக்கு உருவாகும். தமிழ்மொழிக்கு எவ்விதக் குறையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர் அவர். அதனால் அந்த ‘கறார்த்தன்மை’ அவரிடம் ஏற்பட்டிருக்கிறது போலும். அவர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டவர். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் தியாகராச செட்டியாரிடத்து மதிப்பு மிகுதி. அதனால் அவ்வப்போது கும்பகோணம் சென்று தியாராச செட்டியாரிடத்தும் அங்கிருந்த சைவ அன்பர்களிடத்தும் தமிழறிஞர்களிடத்தும் அளவளாவி வருவது அவரது வழக்கம்.
அங்ஙனம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்றிருந்தபொழுது அங்கு வட்டாட்சியராக இருந்த (தாசில்தார்) சிவகுருநாத பிள்ளை என்பவரைச் சந்தித்தார். சிவகுருநாத பிள்ளைக்கு அவரிடத்து மிகுந்த மரியாதை உண்டாயிற்று. சிவகுருநாத பிள்ளையும் மற்ற சைவ அன்பர்களும் கலந்து பேசி மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். “ஐயா! பெரும் சிறப்புடைய கும்பேசுவரரின் மகிமைகளைத் தமிழ்மக்கள் அறிந்துகொள்ள தலபுராணம் ஒன்றும் இல்லை. அதனைத் தாங்கள் செந்தமிழ்நூலாக இயற்றி அருளினால் பேறுபெற்றவர்களாவோம்” என்று சிவகுருநாத பிள்ளை அனைவரது சார்பாக விண்ணப்பித்துக் கொண்டார். “கும்பேசுவரரின் கட்டளை அதுவானால் நடக்கட்டும்” என்று அவர் ஒப்புதல் அளித்தார்.
கும்பகோணத்திலுள்ள பேட்டைத் தெருவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கிளைமடம் ஒன்று இருந்தது. அதில் தங்கிக் கொண்டு கும்பகோண புராணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்யலானார். கும்பகோணத்திற்கு வடமொழியில் தலபுராணம் உண்டு. ஸ்ரீசங்கர மடத்து வித்துவானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகளைக் கொண்டு மொழிபெயர்த்து தமிழில் உரைநடையாக எழுதி வைத்துக் கொண்டார். இது அவரது வழக்கம். அக்குறிப்புகளைக் கொண்டும் சைவ அன்பர்களிடம் கேட்டறிந்த தரவுகளைக் கொண்டும் தமிழில் கும்பேசுவரரின் பெருமைகளைத் தமிழில் செய்யுட்களாகப் பாடலானார். தங்குதடையின்றி செய்யுட்களை இயற்றும் ஆற்றலுடைய இவர் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு சிலர் இருப்பர். உ.வே.சா அவர்களும் அவரிடம் தமிழ் கற்குங்காலத்தில் இங்ஙனம் எழுத்துப்பணி செய்திருக்கிறார். கும்பகோண புராணத்தைப் பாடும்பொழுது இவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதிக் கொடுத்தவர் இவரது மாணவரான திருமங்கலக்குடி சேஷையங்கார் அவர்கள். இவர் பிறிதொரு காலத்தில் அம்பர்ப்புராணம் பாடும்பொழுது மிக முயன்று அம்பர்ப்புராண வடமொழி ஏடுகளை கண்டெடுத்துக் கொடுத்தவர் திருமங்கலக்குடி சேஷையங்கார் ஆவார். அவர்தான் இப்பொழுது கும்பகோண புராணத்திற்கு ஏடெழுதினார்.
குறிப்பிட்ட அளவிற்கு புராணம் எழுதப்பட்டதும் அவற்றை அரங்கேற்றம் செய்யலாம் என்று எண்ணினார். ஏஞ்சியவற்றை நாள்தோறும் எழுதி அன்றன்றே மாலையில் அரங்கேற்றுவது என்று முடிவுசெய்தார். சிவகுருநாத பிள்ளையிடம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். ஆதி கும்பேசர் திருக்கோயிலின் முன் மண்டபத்தில் அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தியாகராச செட்டியார், மகா வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட தமிழறிஞர்களும், சிவகுருநாத பிள்ளையும் அவருடன் பணிசெய்யும் அதிகாரிகளும் அலுவலர்களும் செல்வந்தர்களும் கும்பகோணத்து பொதுமக்களும் சைவ அன்பர்களும் மண்பத்தில் குழுமி கும்பகோண புராணத்தைக் கேட்க ஆவலாயிருந்தனர். மண்டபத்தின் முன்மேடையில் நீறுநீற்றுப் பூச்சும் உருத்திராக்க மாலையும் பொலிய வெள்ளுடையில் தமிழ்த்தெய்வம் போல மீனாட்சிசுந்தரம்பிள்ளை வீற்றிருந்தார். அருகில் ஒரு பக்கமாக அவரிடம் தமிழ் கற்கும் திருமங்கலக்குடி சேஷையங்காரும் பிற மாணவர்களும் அமர்ந்திருந்தனர். ஆதி கும்பேசுவரருக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. சிவகுருநாதபிள்ளை பெருமைபொங்க எழுந்துவந்து புராண ஆசிரியருக்கு மாலை அணிவித்து வணங்கினார். அரங்கேற்றம் தொடங்கியது.
"பூமேய வாரணனும் நாரணனும் வாரணனும் பொற்பூ மாலைத்
தேமேய விண்ணவரும் நண்ணவரும் பதமுலதாஞ் சிறப்பு நல்கி
மாமேய குடமூக்கி னிடமூக்கின் பார்கருணை வடிவின் மேய
பாமேய புகழாதி கும்பேசர் தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்"
என்று ஆதிகும்பேசுவரரை வாழ்த்தி தனது புராண அரங்கேற்றத்தைத் தொடங்கினார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. தமிழின்பமும் பத்திமையும் அங்கிருந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தியாகராய செட்டியார் நாள்தோறும் தவறாமல் அரங்கேற்றத்தில் கலந்துகொண்டார். அரங்கேற்றம் நல்ல முறையில் நடைபெற்று வந்தது. மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் புகழ் ஊர்முழுவதும் பரவியது.
சோதனைகள் நேராத நற்செயல்கள் ஏது? சோதனைகள் களையாத இறையருள் ஏது? கும்பகோண புராணத்திற்கும் சோதனை வந்தது. அரங்கேற்றத்தை ஏற்பாடு செய்தவராலேயே வந்தது.
ஒருநாள் சிவகுருநாத பிள்ளையைச் சந்திக்க ஒருவர் வந்தார். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் புகழ்ப்பெருக்கத்தால் ஒவ்வாமை கொண்டவர் அவர். எப்படியாயினும் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களுக்குச் சிறுமை செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டு அதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தார்; கண்டடைந்தார். சிவகுருநாத பிள்ளையைச் சந்தித்து மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் கும்பகோண புராணத்தைப் புகழ்வதுபோல பேசத் தொடங்கினார்.
“பிள்ளையவர்கள் மாபெரும் வித்துவான் என்பதிலும் அவரது தமிழ் அனைவரையும் இன்புறுத்துகிறது என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தங்கள் ஆதரவால் புராணம் அரங்கேறுவதில் தங்களுக்கும் பெருமையே. ஆனால்…”
“ஆனால் என்ன?”
“நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். தாங்கள் சொல்லலாம் என்றால் சொல்கிறேன்”
“சொல்லுங்கள்”
“கும்பகோண புராணம் அரங்கேற்றம் நிறைவடைந்தவுடன் பிள்ளையவர்களுக்கு தாங்கள் பெருத்த சன்மானம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக ஊரிலுள்ள வணிகர்களிடமும் தங்களிடமும் பொருள் கேட்க இருப்பதாகவும் ஆங்காங்கே கூடிப் பேசிக்கொள்கிறார்கள். நேற்று நான் வட்டாட்சியர் அலுவலகத் தலைமை அதிகாரி வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கும் இந்த விஷயமாகவே பேசிக் கொண்டார்கள்.”
“……”
சிவகுருநாத பிள்ளை அமைதியாக அமர்ந்திருந்தார்.
“ஊரில் ஒன்று சொன்னால் ஒன்பதாக மாற்றிச் சொல்லும் பேர்விழிகள் உண்டென்று தாங்கள் அறியாதததல்ல. அவர்கள் முக்கியமானவர்கள் யாரிடத்திலாவது ஏதாவது ஓதிவிட்டால் தங்களுக்கு பிரச்சினைகள் வந்து சேருமே என்று அஞ்சித்தான் தங்களிடம் இதைத் தெரிவிக்க வந்தேன். தாங்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று நயமாக சிவகுருநாத பிள்ளையின் நெஞ்சத்தில் நஞ்சு பாய்ச்சினார் வந்திருந்தவர்.
சொல்நஞ்சு தக்கமுறையில் வேலையும் செய்தது. சிவகுருநாத பிள்ளையின் உள்ளத்தை அது திரித்தது.
“என்ன செய்யலாம்” என்று படபடப்புடன் கேட்டார் சிவகுருநாத பிள்ளை.
“பேசாமல் இந்த புராண அரங்கேற்ற வேலையை வேறு யாரிடமாவது கைமாற்றிக் கொடுத்துவிட்டு தாங்கள் விலகிவிடுங்கள். அதுதான் தங்களுக்கு நல்லது.”
“யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. நான்தான் ஆர்வத்தால் தெரியாமல் இக்காரியத்தில் இறங்கிவிட்டேன். நல்ல காலமாக நீங்கள் வந்து காத்தீர்கள். இல்லாது போனால் ஊர்ப் பெரிய மனிதர்களின் கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இது சம்பந்தமாக வேறு ஏதேனும் தெரியவந்தால் எனக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்”
தனது காரியம் செவ்வனே முடிந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாது “அப்படியே செய்துவிடுகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார் வந்தவர்.
அடுத்தநாள் மாலை வழக்கம்போல் அரங்கேற்றத்திற்குக் கூட்டம் கூடியிருந்தது. தலைவர் சிவகுருநாத பிள்ளை மட்டும் வரவில்லை. மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் நெடுநேரம் அவருக்காகக் காத்திருந்துவிட்டு அவர் வாராரமயால் அன்றைய அரங்கேற்றப் பகுதியை எப்பொழுதும் போல நயம்படச் சொல்லிமுடித்தார். இரவு முழுவதும் சிவகுருநாதபிள்ளை அரங்கேற்றத்திற்கு வராததை எண்ணியவாறே இருந்தார். மறுநாள் காலை அவரது வீட்டிற்கே சென்றுவிட்டார். மீனாட்சிசுந்தரம்பிள்ளை வந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த சிவகுருநாத பிள்ளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். முகமலர்ச்சியில்லை; சரியான பேச்சில்லை; வந்திருப்பவரைக் கவனியாது ஏதேதோ காரியங்களில் ஈடுபட்டிருந்தார்.
தானே பேச்சைத் தொடங்கலாம் என்று கருதிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் “தங்களுக்கு ஏதேனும் உடல்நலமில்லையா? நேற்று தாங்கள் அரங்கேற்றத்திற்கு வாராதது பெரும் குறையாகவே இருந்தது. தங்களுக்கு சுகமில்லையோ என்று எண்ணிப் பார்க்க வந்தேன்” என்றார்.
அப்பொழுதும் படபடப்புடனே இருந்த சிவகுருநாத பிள்ளை “ஐயா! தங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். நல்ல வேளையாக நீங்களே வந்துவிட்டீர்கள். ‘புராண அரங்கேற்றம் என்ற நல்ல காரியத்தை ஏற்று நடத்த வேண்டும்’ என்ற சிலரது சொற்களைக் கேட்டு ஆர்வத்தால் யோசிக்காமல் இக்காரியத்தில் இறங்கிவிட்டேன். என் முயற்சியால்தான் இந்தப் புராண அரங்கேற்றமே நடக்கிறது என்று நீங்கள் அனைவரிடமும் பேசுவதாக அறிகிறேன். அதுமட்டுமல்ல தங்களுக்கு பெரும் நிதி அளிப்பதற்காக சிலரிடம் பொருள்கேட்டு அவர்களை நிர்ப்பந்திக்க உள்ளதாகவும் பேச்சுகள் என் காதில் விழுகிறது. மற்றவர்கள் எப்படியிருந்தாலும் நீங்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கலாமா? எனது மேலதிகாரிகளுக்கு இது தெரியவந்தால் எனது வேலைக்கே அது பங்கம் விளைக்குமே. உங்களுக்கு உதவப்போய் நான் வாழ்விழக்க முடியுமா? நீங்கள் வேறு யாரையேனும் வைத்து புராணத்தை அரங்கேற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் இவ்விஷயத்தில் என் தொடர்பை நிறுத்திக் கொள்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் வெளியில் பேச வேண்டாம்” என்றார்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அமைதியான குணமுடையவர்தான். யார் செய்த பிழையையும் மன்னிக்கும் இயல்பினர்தான். ஆயினும் சிவகுருநாத பிள்ளையின் சொற்கள் அவரைச் சினம் கொள்ளச் செய்தது. கடுமையான குரலில் “ஐயா! நான் உங்களை நம்பி இந்த ஊருக்கு வரவில்லை. உங்களைக் காட்டிலும் உயர் அதிகாரிகள் என் அன்பர்களாய் இருக்கிறார்கள். உங்களால் நான் புகழெய்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். என் புகழ் என்னவென்று தமிழ்நாடு அறியும். உங்களால் நான் வாழ்ந்து வருகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? என்னை நீங்கள் சிறிதும் அறியவில்லையே. இந்தப் புராண அரங்கேற்றத்தில் நீங்களே தொடர்பு கொள்வதாயிருந்தாலும் அதற்கு நான் சம்பதிக்க மாட்டேன். உங்களுடைய தொடர்பை இத்துடன் விட்டுவிட்டேன்” என்ற சொல்லி அங்கிருந்து கிளம்பி தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டார். சிவகுருநாத பிள்ளைக்கு வேறொரு அச்சம் தொற்றிக் கொண்டது. தமிழறிஞரான மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் சினம் தனக்கு ஏதேனும் தீங்கு விளைவித்துவிடுமோ என்று அஞ்சினார். அதற்கு என்ன செய்வது என்று எண்ணினார். திருவாவடுதுறை ஆதீன சந்நிதானமாக அருள்பாலிக்கும் தவத்திரு சுப்பிரமணிய தேசிகரிடத்து ஒருவரை அனுப்பி “தங்கள் ஆதீன வித்துவானாகிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் என்னிடம் மிகுந்த கோபம் உடையவர்களாய் இருக்கிறார்கள். என்னிடம் மரியாதையில்லாமல் தாறுமாறாகப் பேசிவிட்டார். என்னிடம் கோபமில்லாமல் இருக்குமாறும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தாங்கள் பிள்ளையவர்களிடம் கட்டளையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
செய்தி தேசிகர் அவர்களுக்குச் சென்றது. மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் இயல்பை அறிந்தவர் தேசிகர். ஆதலால் ஏதோ தவறாக நடந்துள்ளது என்று கிணித்துவிட்டார். ஆதீனத்திலிருந்த விசுவலிங்கத் தம்பிரான் அவர்களை அழைத்தார்.
“சிவகுருநாத பிள்ளையிடமிருந்து ஒருவர் நம்மிடத்தில் செய்தி கொண்டு வந்திருக்கிறார். அதிலிருந்து சிவகுருநாத பிள்ளைக்கும் நமது வித்துவான் அவர்களுக்கும் ஏதோ மனவருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதனை நீக்கி வரவேண்டும்” என்றார் தேசிகர் அவர்கள்.
“தங்கள் ஆணை” என்று சொல்லி விசுவலிங்கத் தம்பிரானும் விடைபெற்றுச் சென்றார்.
விசுவலிங்கத் தம்பிரான் சிவகுருநாத பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அவரை வணங்கியபின் சிவகுருநாதபிள்ளை “மீனாட்சிசுந்தரம்பிள்ளை தங்கள் ஆதீனத்து வித்துவான் அல்லவா? அவரிடம் எனது பெருமையைப் பற்றிச் சொல்லுங்கள். அவர் என்னிடம் அளவிற்கு அதிகமாகப் பேசிவிட்டார். அவரை நீங்கள் கண்டித்து இந்த ஊரில் இருக்கும்வரை என்னிடம் மரியாதையாக நடந்துகொள்ளச் செய்ய வேண்டும்” என்று படபடத்தார்.
“ஐயா! நீங்கள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் என்ன சாதாரண மனிதரா? தமிழ்க்கடவுள் அவர். ஆதீனத்தால் அவருக்குப் பெருமை ஏற்படவில்லை. அவரால்தான் ஆதீனத்திற்குப் பெருமை பெருகுகிறது. ஆதீனத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்பவராக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆதீனத்திலிருந்து அவருக்கு எந்த சம்பளமும் கொடுக்கப்படுவதில்லை. ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்று அங்கு இருந்து தமிழ் கற்பிக்கிறார்கள். அதனால் நீங்கள் சொன்னதுபோல ஆதீனம் கட்டளையிட இயலாது. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு செல்வாக்கு உண்டு. மரியாதை உண்டு. பெரிய அதிகாரிகளெல்லாம் அவரது தமிழ் முன்னர் பணிந்து மரியாதை செய்கிறார்கள். அவர்கள் யாரிடத்தும் மரியாதைக் குறைவாக நடப்பவரல்ல. அவர்கள் மனவருத்தம் அடையும்படி தாங்கள்தான் நடந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஆதீன சந்நிதானத்தின் கட்டளை மூலமாக நடந்தவற்றையெல்லாம் அறிந்தே யாம் இங்கு வந்தோம்” என்றார் விசுவலிங்கத் தம்பிரான்.
விசுவலிங்கத் தம்பிரானின் சொற்கள் சிவகுருநாத பிள்ளையின் அச்சத்தை மேலும் அதிகரித்தது. மேசையில் கையை ஓங்கி அறைந்தார். செய்வதறியாது தவித்தார். அறியாமையால் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களைப் பகைத்துக் கொண்டோமோ என்று பதைத்தார். பின்னர் தம்பிரான் அவர்களிடம், “சுவாமி! தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். பிள்ளையவர்களின் பெருமையை அறியாது பேசிவிட்டேன். அவர்களிடம் நான் சந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டதைச் சொல்ல வேண்டும். பிள்ளையவர்கள் என்னிடம் அன்போடு இருக்கும்படி தாங்கள்தான் செய்ய வேண்டும். நான் இனி அவரிடம் மரியாதையாக நடந்துகொள்கிறேன்” என்றார்.
“சரி. அதை யாம் சொல்ல முடியும். பிறரது குற்றங்களை எளிதில் மன்னித்துவிடும் குணமுடையவர் அவர். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் மட்டும் அவரிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுவே யாம் சொல்ல வேண்டுவது.”
“ஆகட்டும் சுவாமி! அப்படியே நடந்துகொள்கிறேன்.”
விசுவலிங்கத் தம்பிரான் அங்கிருந்து கிளம்பி நேராக மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். தம்பிரான் அவர்களைக் கண்டதும் அவரது திருவடிகளில் வணக்கம் செலுத்தினார்.
“தாங்கள் இங்கு எழுந்தருளியது நான் பெற்ற பேறு. புராண அரங்கேற்றம் நடந்து வருகிறது. தாங்கள் உடனிருந்து நடத்தித் தரவேண்டும்” என்றார்.
“அங்ஙனமே அருள்வாய்க்கும்” என்ற விசுவலிங்கத் தம்பிரான் சிவகுருநாத பிள்ளையின் வேண்டுகோளைச் சொல்லி அவரிடம் அன்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“சுவாமி! அவரிடம் நாம் அன்புடனே இருந்தோம். இருக்கிறோம். இருப்போம். அவர்தான் உள்ளம் திரிந்து தன்னை யாரென்று வெளிப்படுத்திவிட்டார். நமச்சிவாய மூர்த்திகளின் இன்னருளும் சந்நிதானத்தின் குருவருளும் ஆதீனத்தின் துணையும் இருக்கும்பொழுது எனக்கு என்ன கவலை. புராணம் நல்ல முறையில் அரங்கேறி வருகிறது என்பதை சந்நிதானத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்றார்.
“நல்லது! திருவருளும் குருவருளும் உங்களுக்கு என்றும் துணையிருக்கும்” என்று வாழ்த்தி விடைபெற்றார் தம்பிரான் அவர்கள்.
திருவாவடுதுறை ஆதீனம் அடைந்து சந்நிதானத்திடம் நடந்தவற்றைக் கூற அவர் மகழ்ச்சி அடைந்தார்.
புராண அரங்கேற்றத்திற்குரிய ஏற்பாடுகளை நண்பர்கள் சிலர் செய்திருந்தனர். ஆயினும் தொடர்ந்து அரங்கேற்றம் நடைபெறுவதற்கு செல்வந்தர்களின் உதவியும் தேவை. முன்னர் நிகழ்ந்தமை அவரிடம் சிறு வருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அதனால் தக்கவரிடம் இப்புராண அரங்கேற்றம் செல்ல வேண்டும் என்று எண்ணி திருவருளையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
கும்பகோணத்திலிருந்த கோபு நடலஞ் செட்டியார், கோபு சுப்புராயச் செட்டியார், பஞ்சநாத செட்டியார், முடுக்குத்தெரு கந்நதப்பச் செட்டியார் முதலியோர் புராண அரங்கேற்ற தேவைகளைக் குறித்து கேள்வியுற்று மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் வந்தனர். “ஐயா! தாங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. புராண அரங்கேற்றம் வழக்கம்போல் நடைபெறும் அதற்கு நாங்கள் பொறுப்பு” என்றனர். திருவருட் கருணையினை நினைந்துருகினார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள்.
கும்பகோண புராணம் சைவப் புராணம். ஆனால் கும்பேசுவரர் மட்டுமல்லாது புராணத்துள் பெருமாளும் இடம்பெறுகிறார். சாரங்கபாணியும் கோமளவல்லித்தாயாரும் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களால் போற்றப்பட்டுள்ளனர்.
கும்பகோண புராணம் அரங்கேற்றம் நடந்துகொண்டிருந்த காலத்தில் அவ்வூரில் புகழ்பெற்ற வைணவக் கோயிலான சாரங்கபாணி கோயிலின் அறங்காவலர் ஸ்ரீநிவாஸ பட்டாச்சாரியார் என்பவர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களைச் சந்திக்க வந்தார். அவரிடம் கோமளவல்லித் தாயாரைத் தாங்கள் பாட நாங்கள் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே புராணத்தின் ஆராவமுதப் படலத்தில் பத்துப் பாடல்களால் போற்றினார். ஸ்ரீநிவாஸ பட்டாச்சாரியாருக்கு பெருத்த மகிழ்ச்சி. அப்பாடல்களையே சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
முன் சொன்னதைப் போலவே மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் சைவரேயாயினும் அவரது தமிழால் வைணவர்களும் கிறித்தவர்களும் அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். கும்பகோணத்தில் சைவ வைணவர்கள் இருவரும் நிறைந்திருந்தனர். ஆதி கும்பேசுவரரும் சாரங்கபாணியும் அருள்பாலிக்கும் இடமல்லவா? இருதரப்பினரும் இவரை ஆதரிப்பவர்களே. கும்பகோண புராண அரங்கேற்றத்திற்கு வைணவர்களும் வந்திருந்தனர். மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களில் தமிழால் மகிழ்ந்துவந்தனர்.
ஒருமுறை புராணத்தில் கும்பேசுவர பெருமானையும் சாரங்கபாணி பெருமாளையும் ஒருங்கே சொல்ல வேண்டிய இடம் வந்தது. எதிரில் சைவர்களும் வைணவர்களும் குழுமியிருப்பதைக் கண்டார். கண்டதும்,
“எண்ணிய கும்பலிங்க நாயகரை இலங்கும் ஆராவமு தரைச்சீர்
நண்ணிய சைவர் யாவருங் கண்டு நாடொறுந் தந்தைதாய் என்றே
கண்ணிய சிறப்பிற் போற்றிடு வாரேற் கருதுபல் போகமுந் துய்த்துப்
புண்ணிய மிகுந்த பெருஞ்சிவ லோகம் புக்குவாழ்ந்து அமர்வது சரதம்”
என்று பாடலானார். அதாவது கும்பேசுவரரையும் ஆராவமுதப் பெருமானையும் தந்தை தாயாராகப் போற்றுவார்களாயின் பல்வகைப் பாகங்களையும் பெற்று சிவலோகத்திருப்பர் என்னும் பொருள்பட பாடினார். சைவரும் வைணவரும் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ச்சியில் மென்னகை பூத்தனர். சைவத் தமிழறிஞர்கள் சிலர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் அறிவுநுட்பத்தை எண்ணி வியந்தனர்.
நாள்தோறும் காலையில் செய்யும் இயற்றுவதும் மாலையில் அரங்கேற்றப்படுவதும் என புராணம் நல்ல முறையில் அரங்கேறி வந்தது. ஒருநாள் பகற்பொழுதில் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களைச் சந்திக்க தமிழறிஞர்கள் பலர் வந்துவிட்டனர். அவர்களுடன் நண்பகல் வரை உடையாடியதால் களைப்பு மேலிட உணவிற்குப்பிறகு உறக்கம் கொண்டார். மாணவர்களுக்கோ கலக்கம். எழும்பிய பின்னர் சொல்லியிருக்க வேண்டாமா என்று அவர் கேட்டுவிட்டால் என்ன செய்வது. எழுந்தவுடன் அருகில் கலக்கத்துடன் ஏடெழுதுபவரான திருமங்கலக்குடி சேஷையங்கார் நிற்பதைக் கண்டார்.
“என்ன கலக்கமாக நிற்கிறீர்”
“ஐயா! மாலை அரங்கேற்றத்திற்கான செய்யுட்கள் இன்னும் இயற்றப்படவில்லை. முன்னரே தெரிவிக்கும் சூழலும் ஏற்படவில்லை” என்றார் சேஷையங்கார்.
“சரி, ஏடுகளை எடுத்துக் கொள்ளும்”
சேஷையங்கார் ஏடுகளுடன் வந்து தயாராக நின்றார்.
“நேற்று நிறைவு செய்த இறுதிப்பாடலைப் படிக்கலாமே”
சேஷையங்கார் படித்தார்.
கண்மூடி ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“எழுதிக் கொள்ளும்” என்று பாடல்களைச் சொல்லலானார். சில நாழிகைக்குள் ஐம்பது பாடல்கள் எழுதப்பட்டுவிட்டன. இத்தனை விரைவாக செய்யுள் இயற்றும் இவரது திறம் அங்கிருந்த அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சேஷையங்கார் திருவடி விழுந்து பணிந்தெழுந்தார். அன்றைய அரங்கேற்றம் சிறப்பாக அமைந்தது.
முன்னர் கண்ட ஸ்ரீநிவாஸ பட்டாச்சாரியார் போன்ற வைணவர்கள் மட்டுமல்லாது அரங்கேற்றத்திற்கு சில விதண்டாவாத வைணவர்களும் வந்தனர். சைவப் புராண அரங்கேற்றத்தில் குழப்பம் விளைவிக்கும் முயற்சி அது. வைணவ வித்துவான் ஒருவர் அரங்கேற்றத்திற்கு அடிக்கடி வந்து விதண்டாவாதம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தனார். இவர் என்ன சமாதானம் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை. இறுதியில் தியாகராச செட்டியாரின் முயற்சியால் வைணவ வித்துவான் தனது சிறுமைச் செயலை நிறுத்திக் கொண்டார்.
என்னென்னவோ, எத்தனை எத்தனையோ இடையறுகள் நேரிட்டாலும் அவற்றையெல்லாம் திருவருட் கருணையாலும் தமிழாற்றலாலும் களைந்து கும்பகோண புராணத்தை நிறைவு செய்தார். 1866 ஆம் ஆண்டு புராண அரங்கேற்றம் நிறைவு பெற்றது. குடந்தைப் புராணமாக அது வெளிப்பட்டது. மொத்தம் 16 படலங்கள், 2384 பாடல்கள் என குடந்தைப் புராணம் அமைந்தது.
புராண ஏடுகளைச் செம்பட்டால் சுற்றிவைத்து மலர்களால் அலங்கரித்தனர். யானைமீது ஏடுகளை ஏற்றி ஊர்வலம் வந்தனர். சிவகோசம் எங்கும் முழங்கியது. பெரிய பல்லக்கு ஒன்று விலைக்கு வாங்கப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களை இருக்கச்செய்து முக்கிய பிரமுகர்கள் பல்லக்கைச் சுமந்து சென்றனர். தமிழ்ச்செல்வம் பொருட்செல்வத்தினும் உயர்ந்தது என்று உலகிற்கு பறைசாற்றினர். கும்பகோண புராணத்திற்காக அவ்வூர்ச் செல்வந்தர்கள் இரண்டாயிரம் ரூபாய் அவருக்குக் கொடையளித்தனர். சால்வை, பட்டுத் துணிமணிகள் போன்றவை குவிந்தன. பெரும் தமிழ்க் கொண்டாட்டமாகவும் பக்தி பரவசமாகவும் அரங்கேற்றத்தின் நிறைவுவிழா நிறைவு பெற்றது.
கும்பகோணத்திலிருந்து மீண்டும் திருவாவடுதுறை கிளம்பினார். கிடைத்த நிதிக்கொடையாவும் அவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் ஏற்பட்ட அரிசி, பருப்பு போன்ற மளிகைக்கடைக் கடனுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. சால்வைகளும் பட்டாடைகளும் பிறவும் உடனிருந்த மாணவர்களை அழைத்து அவர்களுக்குக் கொடுத்தார். வண்டிச் செலவுக்குக் காசு இல்லை. அங்கிருந்த செல்வந்தர் ஒருவரிடம் கடன்பெற்று வண்டிக்கு வாடகை அளித்தார். கும்பகோணத்தில் தமிழ்ச்செல்வம் நிறைந்தது.
(அரங்கேற்றம் தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment