பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - ஒளவை

இதழ் - 129                                                                                       இதழ் - ௧
நாள் : 13- 10 - 2024                                                                       நாள் :  -  - ௨௦௨௪


ஔவை ( கி.பி. 12 )

   
     அக்காலத்தில்,அரசர்களையும் அமைச்சர்களையும் செல்வந்தர்களையும் பாடிய புலவர்களுக்குப் பரிசில் கிடைத்தது. தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு புலவர்கள் பாடிப் பரிசில் பெற்ற காலத்தில் தான் ஔவையும் வாழ்ந்தார். ஆனால் இவர் விதிவிலக்கானவர். செல்வத்துக்காக மட்டுமின்றி அன்புக்காகவும் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழை, எளிய மக்களின் அன்பினை மதித்து, அதனைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் மேல் பாடல்களைப் பாடிய நிகழ்வுகள் பல உண்டு.

     இவ்வாறு பிறர் போற்றும் நற்குணங்கள் கொண்ட ஔவை மேல் மனக்கசப்பினை வளர்த்த புலவர்கள் சிலரும் உள்ளனர்.  தாம் நன்கு கற்று அறிந்தவர்கள் என்ற மமதையில் உள்ளவர்களுக்கு ஔவை கூறும் கூற்று,

"கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று
 உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த 
 வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
 எறும்புந்தன் கையாலெண் சாண்"

     இவ்வுலகத்தில் மண் இல்லாத இடமே இல்லை எனலாம். இவ்வாறு பரந்திருக்கும் மண்ணில் ஒரு பிடி  மண்ணின் அளவே நாம் கற்றது என்கிறார்; அவ்வாறாயின் நாம் கற்க வேண்டியது மீதம் உள்ளவை . எண்ணிப்  பார்த்தால் மலைப்பாக உள்ளது அல்லவா! அதுமட்டுமல்ல கல்விக்குரிய தெய்வமாக வணங்கப்படும் கலைமகள் இன்றளவும் கற்றுக் கொண்டே இருக்கிறாள் என்கிறார்.  கற்றலின் ஆழத்தினை இலகுவாக எடுத்தியம்புகிறார். ஓரளவு கற்று வைத்துக் கொண்டு அனைத்தையும் அறிந்தது போல் பேச வேண்டாம் என்கிறார்; அதற்கு உவமையாக  எறும்பினைக் கூறுகிறார் அதாவது எறும்பு தனது கையினால் அளந்தால் எண்சாண் அளவு இருக்கும் ஆகையினால்எறும்பின் அளவு  எண்சாண் எனக் கூற முடியுமா எனக் கேட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

     அனைத்தையும் கற்று விட்டோம் என இறுமாப்பு அடையக் கூடாது. கற்க வேண்டியவை எண்ணிலடங்காதவை என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை ஔவை இலகு தமிழில் மிக எளிமையாக நமக்கு விளக்கியுள்ளார். 

( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment