பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 24                                                                  இதழ் -
நாள் : 09-10-2022                                                     நாள் : ௦௯--௨௦௨௨

 
   
 
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 

ஓடை

     இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்று பெயர். ஓடை என்பது ஆறு உருவாவதற்கு அடிப்படையானது. மருத நிலத்தில் ஓடை பாய்ந்து வரும் இடங்களில் மக்கள் வசிக்கத் தொடங்கினர். தங்கள் வசிப்பிடங்களுக்கு அவ்வோடையின் பெயரை வைத்து அழைத்தனர். அந்த வகையில் நெல்லை நாட்டில் மயிலோடை என்ற அழகிய ஊரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பாலோடை என்ற ஊரும், தஞ்சை நாட்டில் செம்போடை என்ற ஊரும், ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு என்ற ஊரும் இவ்வாறு ஓடை என்ற சொல்லிலிருந்து உருவாகியிருப்பதை அறியலாம்.

கால்

     அணைகளைப் போலவே மருதநிலத்தில் முக்கிய நீர்ப்பாதையாக கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்தக் கால்வாய் அருகில் தோன்றி வளர்ந்துள்ள ஊர்களும் அந்தந்த கால்வாயின் பெயரால் வழங்குவதைப் பார்க்க முடிகிறது. நெல்லை நாட்டில் வெள்ளக்கால், பள்ளக்கால் முதலிய ஊர்கள் உள்ளன. தலைக்கால் என்னும் ஊர் இராமநாதபுரத்தில் உள்ளது. குவளைக்கால் தஞ்சாவூரிலும், மணற்கால் திருச்சிராப்பள்ளியிலும், மாங்கால் வடஆர்க்காட்டிலும் காணப்படுகின்றன. அதேபோல கொள்ளேகால் காரைக்கால் முதலிய ஊர்ப்பெயர்களும் இவ்வாறு கால்வாய் பெயரால் அமைந்திருப்பதை காணமுடிகிறது. இவ்வாறு கால்வாய் என்னும் சொல்லே நெல்லை நாட்டின் ஒரு ஊரின் பெயராக அமைந்திருப்பதைக் காணலாம்.

கழனி

     கழனி என்னும் சொல் வயல்கள் நிறைந்த நிலப்பரப்பைக் குறிக்கும். ஆர்க்காட்டிலுள்ள தென்கழனி, புதுக்கழனி என்ற ஊர்களும், தஞ்சாவூரில் காக்கழனி என்ற ஊரும் கழனி என்ற சொல்லைக் கொண்டு அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment