இதழ் - 151 இதழ் - ௧௫௧
நாள் : 30 - 03 - 2025 நாள் : ௩௦ - ௦௩ - ௨௦௨௫
கிருஸ்துவர் பெயரில் எழுந்த ஊர்கள்
தமிழ்நாட்டில் சென்ற சில நூற்றாண்டுகளாகத் பரவி வரும் கிருஸ்துவ சமயத்தின் சார்பாக வளர்ந்துள்ள ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் கிருஸ்தவர்கள் மிகுதியாக வசிக்கும் பாகங்களில் நாசரேத்து, சுவிசேஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இன்னும் ஆரோக்கியபுரம், சாந்தபுரம், சௌக்யபுரம், சந்தோஷபுரம், நீதிபுரம் முதலிய புத்தூர்களும் சென்ற நூற்றாண்டில் எழுந்துள்ளன.
இருநூறாண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் கிருஸ்துவப் பெருந்தொண்டராக விளங்கிய வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக் குறிச்சி என்னும் பழைய ஊரின் ஒரு பாகத்தில் அடைக்கல மாதா ஆகிய தேவ மாதாவுக்கு ஒரு கோவில் கட்டினார். அம் மாதாவின் அருட்காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார். அவ்வூரில் கோவில் கொண்ட மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அதன் பெயர் திருக்காவலூர்க் கலம்பகம் என்பது.
வீரமாமுனிவர் கால முதல், வேதியர் என்னும் சொல் கிருஸ்தவ சமுதாயத்தில் உபதேசியார்களைக் குறிப்பதாயிற்று. அன்னார்க்குரிய ஒழுக்க முறைகளையெல்லாம் தொகுத்து, 'வேதியர் ஒழுக்கம்' என்னும் பெயரால் ஓர் உரைநடை நூலும் எழுதினார் முனிவர். வேதியர்புரம் என்ற ஊர் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது. கிருஸ்தவர்கள் வாழும் ஊராகவே அஃது இன்றும் விளங்குகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment