பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 144                                                                                  இதழ் - ௧
நாள் : 09 - 02 - 2025                                                              நாள் :  -  - ௨௦௨



குறுநில மன்னர்  - குமணன்

     கடையெழு வள்ளல்களின் காலம் கழிந்த பின்பு கொங்கு நாட்டுக் குறுநில மன்னனாகிய குமணன் சிறந்த கொடையாளனாக விளங்கினான். முதிரம் என்னும் மலையும், அதைச் சேர்ந்த நாடும் அவன் ஆட்சியில் அமைந்திருந்தன. குமணன் வாழ்ந்த ஊர் குமணம் என்று பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்த தென்று அறிந்தோர் கூறுவர். 

     கோவை நாட்டைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில் கொழுமம் ஒரு சிற்றூராக இன்று காணப்படுகின்றது. சோழீச்சுரம் என்னும் பழைமையான சிவாலயம் இவ்வூரில் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொங்கு நாட்டையாண்ட வீரசோழன் அங்கே கட்டிய கோயில் வீரசோழீச்சுரம் என்னும் பெயர் பெற்றுப் பின்னர்ச் சோழீச்சரம் எனக் குறுகி வழங்கலாயிற்று என்பது சாசனங்களால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும் குதிரை மலையே பழைய முதிர மலை என்பர். முதுகிற் சேணமிட்டு நிற்கும் குதிரை போன்று இம்மலை காட்சியளித்தலால் பிற்காலத்தார் அதனைக் குதிரை மலை என்றும் அழைத்தனர்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment