பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 69                                                                                         இதழ் -
நாள் : 20-08-2023                                                                          நாள் : 0-0-௨௦௨௩
 
    
 உரிச்சொல்

பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்

     கடி என்னும் உரிச்சொல் பலகுணம் தழுவி வரும். இது காவல், கூர்மை, நறுமணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஒலித்தல், நீக்கல், திருமணம், காரம் என்ற 13 பொருளை உணர்த்தும்.
 
          கடியென் கிளவி காப்பே கூர்மை
          விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
          விரையே மிகுதி புதுமை ஆர்த்தல்
          வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்
                     ( நன்னூல், நூற்பா. எண் 457 )
சான்று
  • கடிநகர் - காவல் உடைய நகர் - காவல்
  • கடி நுனைப் பகழி - கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு - கூர்மை
  • கடிமலர் - மணம் நிறைந்த மலர் - நறுமணம்
  • கண்ணாடி அன்ன கடி மார்பன் - ஒளி பொருந்திய மார்பு கொண்டவன் – ஒளி
விளக்கம்
  • கடி அரண் - வலிமையான கோட்டை - சிறப்பு
  • எம் அம்பு கடி விடுதும் - எம்முடைய அம்புகள் விரைவாக செலுத்தப்படும் - விரைவு
  • கடி உணவு - மிகுதியான உணவு - மிகுதி
  • கடி மணச் சாலை - புதுமை மணம் நிறைந்த இடம் - புதுமை
  • கடி முரசு - ஒலிக்கும் முரசு - ஆர்த்தல்
  • கடிமது நுகர்வு - விலக்கத்தக்க மது - விலக்கு
  • கடிவினை முடுகு - இனி திருமணத்தை விரைந்து நிகழ்த்து - மன்றல்
  • கடிமிளகு - காரமான மிளகு – கரிப்பு
  • கடியாமம் காக்கும் கைவிளக்கு - அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கை விளக்கு.
    இவ்வாறு பலகுணம் தழுவிய உரிச்சொற்கள் செய்யுளில் பயின்று வரும்.
 
    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment