பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 26                                                                                    இதழ் -
நாள் : 23-10-2022                                                                      நாள் : --௨௦௨௨
 

ஆத்திசூடி (ஔவை)
" இயங்கித் திரியேல் "

உரை
     உணர்ச்சிவசப்பட்டு செயல்களைச் செய்தல் வேண்டாம். உணர்ச்சி வசப்படாமல் அறிவுத் தெளிவுடன் இயங்குதல் வேண்டும்.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் – 24

     மன்னவனுக்கு உன்னாட்டார் வந்து முடிசூட்ட
     முன்னனலின் மூழ்கி முதன்மைபெற்றார் – அன்னவர்போல்
     நன்றறியும் புன்னைவன நாதனே வையகத்தில்
     என்றுமியங் கித்திரி யேல்

 
உரை
     மன்னவன் ஒருவனுக்கு உன்னுடைய நாட்டைச் சேர்ந்தோர் வந்து முடிசூட்ட அவர்கள் நெருப்பில் மூழ்கி பெருமை பெற்றார்கள். அவர்களைப்போல் நற்செயல்கள் யாவை என்பதை அறியும் அறிவுடைய புன்னைவனநாதனே  நீயும் இவ்வுலகத்தில் என்றும் உணர்ச்சிக்கு இடங்கொடுக்காமல் தெளிவுடன் செயல்படுக.  
 
விளக்கம்
     அனல் – நெருப்பு. அனல்மூழ்கி – நெருப்பினுள் புகுதல். எதோ ஒரு காரணத்திற்காக நெருப்பு மூழ்கி தன்னை நிலைநிறுத்தி சிறப்புபெற்றனர் என்பதை முதன்மைபெற்றார் என்றார். அவர்களைப் போல் நீயும் செயல்படுக என்று புன்னைவன மன்னனுக்கு இராமபாரதி அறிவுறுத்துகிறார். (இவ்வெண்பாவில் வரும் எடுத்துக்காட்டு கதை எதைக் குறிப்பிடுகிறது என்று புலப்படவில்லை.)
 
கருத்து
     உள்ளம் போனவாறு செயல்படுதல் தீமைபயக்கும். அது கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment