பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 18                                                              இதழ் -
நாள் : 28-8-2022                                                  நாள் : --௨௦௨௨

  
 
 
முல்லை நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்

சுரம்

     சுரம் என்பது காட்டைக் குறிக்கும். தொண்டை நாட்டிலுள்ள திருச்சுரம் என்ற ஊர் இன்று திருச்சூலம் என்று வழங்கப்படுகின்றது. அந்த நாட்டிலுள்ள மற்றொரு ஊரின் பெயர் திருவடிச்சுரம் இன்று திருவடிச்சூலம் என்று அழைக்கப்படுகின்றது.

மரம்
     காடும் காடு சார்ந்த இடம் முல்லை என்பதால் இந்நிலப்பகுதி முழுவதும் பெரும்பாலும் மரங்கள் நிறைந்து காணப்படும். ஆகவே மரப்பெயர்களாலும் பெரும்பாலான ஊர்கள் அமைந்துள்ளன. கரவீரம் என்பது பொன்னிறம் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரம். திருகரவீரம் பாடல் பெற்றத் தலமாகும். திருப்பைஞ்ஞீலி என்பது தேவாரப் பாடல் பெற்ற தலம். பைஞ்ஞீலம் என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். வடஆர்க்காட்டில் புன்னை, சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும் கருங்காலியும் திருநாவலுாரும் பாதிரிப்புலியூரும் அவ்வாறே பெயர்பெற்றன.

பாடி
     முல்லை நிலத்தில் வழங்கும் ஊர்ப்பெயர்களில் பாடி என்ற பெயரிலும் அமைந்துள்ளன. சண்டேசுரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி (தேவாரப் பாடல்). 
 
     கண்ணபிரான் பிறந்து வளர்ந்த கோகுலம் ஆயர்பாடி என்று அழைக்கப்படுகின்றது. வடஆர்க்காட்டில் வேலமரங்கள் நிறைந்த இடத்தில் மக்கள் ஊர் அமைத்து வாழ்ந்தனர். அவ்வூர் வேலப்பாடி என்று அழைக்கப்படுகிறது. காட்பாடி, வாழப்பாடி முதலிய ஊா்ப்பெயர்கள் இங்கு நினைக்கத்தக்கன.

பட்டி
     பட்டி என்னும் பெயரும் முல்லை நில ஊரைக் குறிக்கும். பாண்டிய நாட்டில் பெரும்பாலும் பட்டி என்ற ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, கள்ளிப்பட்டி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, கோவில்பட்டி போன்று இன்னும் பிற ஊர்களும் பட்டி என்ற பெயரைத் தாங்கி அமைந்துள்ளன.

மந்தை

     ஆடு, மாடுகள் கூட்டமாகத் தங்கும் இடம் மந்தை என்று அழைக்கப்படும். வடஆர்க்காட்டில் வெண்மந்தை, புஞ்சைமந்தை என்ற ஊர்கள் அமைந்துள்ளன. 
 
     அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர்கள் தம் ஊர்களுக்கு மந்து என்று பெயர் வைத்துள்ளனர். மாடுகள் மேய்த்து அவற்றை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் தோடர்கள். அவர்கள் தங்களின் கால்நடைகள் வாழும் பகுதியிலேயே வசிப்பிடங்களை அமைத்து வாழ்ந்து வருவதால் தம் ஊர்களுக்கு மந்து எனப் பெயர் வைத்துள்ளனர்.
 
     ன்று வழங்கும் ஊட்டி முன்பு ஒத்தைகல் மந்து ஆகும். அதுபோல் முக்குருத்தி மந்து, போர்த்தி மந்து என்னும் பிற பெயர்களும் இங்கு குறிப்பிடத்தக்கனவாகும்.
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment