இதழ் - 166 இதழ் - ௧௬௬
நாள் : 20 - 07 - 2025 நாள் : ௨௦ - ௦௭ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
வித்யாலய வழிபாடு
வித்யாலய கல்வி நிறுவனங்களில் (பள்ளி முதல் கல்லூரி வரை) நாள்தோறும் இறைவழிபாடு நடந்த பின்னரே வகுப்புகள் தொடங்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது. வித்யாலயத்தின் தொடக்க காலத்தில் இது எப்படி இருந்தது? இன்று இவ்வடிவத்தை எப்படி வந்தடைந்திருக்கிறது? என்பது தூரனின் நினைவுக்குறிப்புவழி குறிப்பாக அறியமுடிகிறது. குருதேவர் மீதும் தூய அன்னையார் மீதும் சுவாமி விவேகானந்தர் இயற்றிய வடமொழி மந்திரங்கள் வித்யாலயத்தில் எப்பொழுதும் ஓதப்பட்டு வந்துள்ளன. பிறகு தமிழில் பஜனைப் பாடல்கள் பாடிமுடிந்தபிறகு ஒன்றிரண்டு மணித்துளிகள் மௌன வழிபாடு நடைபெற்றுள்ளது. இன்றும் இம்முறை தவறாது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உடன் திருக்குறளையும் ஓதுவது வித்யாலய வழிபாட்டின் தனிச்சிறப்பு. “இந்த ஒழுங்குமுறை திரும்பச் சொல்லிச் சொல்லி அதன் முக்கியத்துவத்தையும் நன்கு புரியுமாறு விளக்கிப் பலமுறை சொன்னதால் வித்யாலயத்திற்கே ஒரு தனிப்பட்ட பூஜையாக அமைந்துவிட்டது. இதை வேறெங்கும் காணமுடியாது” என்று இந்த நடைமுறை குறித்துத் தூரன் எழுதுகிறார்.
இன்றும் சுவாமி சிவானந்தா மேனிலைப் பள்ளியில் வித்யாலத்தின் கொடிப்பாட்டு வாரந்தோறும் பாடப்பட்டு வருகிறது. அப்பாட்டை இயற்றியவர் நமது பெரியசாமித் தூரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
( வித்யாலய நினைவுகள் தொடரும் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment