இதழ் - 82 இதழ் - ௮௨
நாள் : 19-11-2023 நாள் : ௧௯-௧௧-௨௦௨௩
பழமொழி – 82
” இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும் ”
விளக்கம்
ஒருவன் தான் பணி செய்யும் இடத்தில், முதலில் சிறிதான பலன் கிடைத்தாலும் இகழாது நிலைத்து நின்றால், விரைவில் பெரிய பலனை அடைவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்
'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும்'.
உண்மை விளக்கம்
ஒருவன் தனக்கு விருப்பமான (வசதியான) இடத்தில் குறைந்த வருவாயில் பணியில் இணைந்தாலும் முதலில் அதை இகழாது நிலைத்து நின்றால் காலம் கனிந்து வரும்போது பெரும் ஊதியத்தைப் பெறுவான் என்பதையே 'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்' என்று இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
ஊதியம் குறைவென்று கருதி இடத்திற்கு இடம் மாறிச்சென்று ஓரிடத்தில் நிலைத்து நிற்காதவர்கள் தகுதியான உயர்வைப் பெறமாட்டார்கள் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment