ஊருணி
மக்கள் குடிப்பதற்கு ஏற்ற நீர் நிறைந்துள்ள குளம் ஊருணி ஆகும். ஊர் மக்கள் உண்ணும் நீரையுடையதாகையால் ஊருணி என வழங்கப்பட்டது. மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள ஊருணியைத் தம் ஊருடன் சேர்த்து தங்கள் வசிப்பிடத்திற்கு அடையாளமாக வைத்துக் கொண்டனர்.
அந்த வகையில் தோன்றிய ஊர்ப்பெயர்கள் நெல்லையிலுள்ள பேரூரணி, இராமநாதபுரத்திலுள்ள மயிலூரணி, தஞ்சையிலுள்ள புரசூரணி ஊருணி பெயரால் உருவாக்கப்பட்டு வழங்கப்படுவதை அறியமுடிகிறது.
ஊர்
பழந்தமிழர்கள் நான்கு வகை நிலங்களில் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்தாலும், மருதநிலத்தில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளே வசிப்பிடத்திற்கு ஏற்றதாக அமைந்திருந்தன. அக்குடியிருப்புகள் அமைந்த இடத்தை ஊர் என்று பொதுவாக அழைக்கத் தொடங்கினர்.
மரப்பெயர் மற்றும் விலங்குப் பெயர்களுடன் இந்த ஊர் என்ற பெயரையும் சேர்த்து தொடர்ந்து அழைக்கப்பட்டு வந்ததை அறியமுடிகிறது. மருத மரத்தின் பெயரால் அமைந்த ஊர் மருதூர் ஆகும். அதேபோல் நாவல் மரத்துடன் சேர்த்து நாவலூர் முதலிய பெயர்கள் வழங்கப்பட்டு வருவதை காணமுடிகிறது. அதேபோல் தெங்கூர், பாசூர், பனையூர், கடம்பூர் முதலிய பழந்தமிழர் ஊர்கள் மரங்களின் பெயர்களில் வழங்கப்பட்டலாயின.
ஊற்று
தமிழரின் வாழ்க்கை முறையில் மழையின் மூலம் கிடைத்த ஆற்று நீரைப் பயிர்த்தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தனர். அந்த நீர் மட்டுமன்று ஊற்று நீரையும் அத்தியாவசியத் தேவைக்காக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ஊற்று அடிப்படையில் தோன்றிய ஊர்களும் நம் தமிழகத்தில் காணப்படுகின்றன.
நெல்லையிலுள்ள தாழையூற்று, இராமநாதபுரத்திலுள்ள அத்தியூற்று, திருச்சியிலுள்ள கண்ணூற்று, சேலத்திலுள்ள மாவூற்று முதலிய ஊர்கள் ஊற்றின் அடிப்படையில் தோன்றியவையாகும்.
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . .
. )
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment