பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 108                                                                                                இதழ் - ௧0௮
நாள் : 19-05-2024                                                                                  நாள் : ௧௯-0ரு-௨௦௨௪



தமிழ்ப்புலவர் அறிவோம்


தமிழமுத வாசகர்களுக்கு வணக்கம்!

     புலமைமிக்கவர் புலவர் எனப்படுவர் எனக் கூறினாலும் புலவர் என்பதன் சரியான பொருளானது அறிவுடையோர் என்பதாகும். புலம் என்றாலே அறிவு எனப்படும். பழைய உரை நூல்கள் புலவர்களைச் சான்றோர் என்றும் நல்லிசைப் புலவர் என்றும் கூறுகிறது. 

    புலவர் என்ற சொல்லானது, இருபாலருக்கும் பொதுவானது. அதாவது ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான சொல்லாக புலவர் என்ற சொல் காணப்படுகிறது.

    திருவள்ளுவர் தனது நூலான திருக்குறளில் புலவர்களுடைய இயல்பை,

                "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
                அனைத்தே புலவர் தொழில்" (திருக்குறள் 394)

    அதாவது மகிழும் படியாகக் கூடிப்பழகி, இனி இவரை எப்போது காண்போம் என்று வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்  எனக் கூறிச் சிறப்பிக்கிறார்.

    புலவர்களின் சிறப்பையும் பெருமையையும் குமரகுருபரர் தனது நீதிநெறி விளக்கத்தில்,

        'கலைமகள் வாழ்க்கை முகத்ததெனினும் 
        மலரவன் வண்டமிழோர்க்  கொவ்வான் - மலரவன்  செய்
        வெற்றுடம்பு மாய்வனபோன்  மாயா புகழ்கொண்டு
        மற்றிவர் செய்யுமுடம்பு"      (நீதிநெறி விளக்கம் பா.6)

  என்பதிலிருந்து, கலைமகள் பிரமனின் முகத்தில் இருந்தாலும்  பிரமன்  தமிழ்ப் புலவர்க்கு ஒப்பாக மாட்டான். ஏனெனில், பிரமன் படைக்கும்  உடம்புகள் மாய்ந்துவிடுவது போல, புலமைச் சான்றோர் படைக்கும் நூல்கள் அழியாமல் நிலைபெறும் எனக் கூறுவதிலிருந்து , உயிர்களைப் படைப்பவனைக் காட்டிலும் இலக்கியம் படைப்பவனே உயர்ந்தவன்  என்கிறார்  எனலாம்.

   இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment