இதழ் - 168 இதழ் - ௧௬௮
நாள் : 03 - 08 - 2025 நாள் : ௦௩ - ௦௮ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
பதவிக்கேற்ற ஊதியமல்ல; தேவைக்கேற்ற ஊதியம்
பெரியசாமித் தூரன் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பணியில் சேர்ந்ததைப் பற்றிய நனைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் வித்யாலயத்தின் நிறுவனர் தி.சு. அவினாசிலிங்கம் (ஐயா) அவர்களைப் பற்றியும் தான் பெற்ற ஊதியம் பற்றியும் சில செய்திகளை நினைவுகூர்ந்துள்ளார். அவை நாம் உளங்கொள்ளத்தக்கவை.
கோபிசெட்டிபாளையத்தில் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தூரன் பணியாற்றிக் கொண்டிருந்தபொழுது ஐயா அவர்கள் அவரது நண்பர் சி.சுப்பிரமணியம் அவர்களை அழைத்துக்கொண்டு அப்பள்ளிக்கு வருகை தந்தார். காரணம் தூரன் அவர்களைத் தான் தொடங்கியிருக்கும் குருகுலப் பள்ளியில் ஆசிரியராக அமர்த்த அவரது ஒப்புதலைப் பெறுவதற்காக. ஐயா அவர்கள் தூரனின் தொண்டுள்ளத்தை தூரனது இளமைக்கால நண்பரான ஈரோடு எல்.கே. முத்துசாமி மூலம் அறிந்தே அவரை வித்யாலயத்திற்கு அழைக்க வந்திருந்தார். தூரனைச் சந்தித்து செய்தியைக் கூறினார். காந்தியக் கொள்கையரான தூரன் காந்திய செயல்பாட்டாளர் ஒருவரிடமிருந்து வந்த இவ்வழைப்பைப் பெரும்பேறாகக் கருதினார்.
வைரவிழாப் பள்ளியில் ஒருமாதம் இருந்து அடிப்படைப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு கோபிசெட்டிபாளையத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கிப் பயணப்பட்டார். புறப்படும்பொழுது அவர் செய்த செயல் வியப்பளிக்கிறது. வைரவிழாப் பள்ளியில் தான் ஈட்டி சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் சாலையில் வீசியெறிந்துவிட்டு சென்றிருக்கிறார். தொண்டுநெறி நிற்கும் ஒரு பள்ளியில் பணிசெய்யப் போகிறோம் என்ற எண்ணமே அவரை இங்ஙனம் செய்யத்தூண்டியிருக்கிறது. காந்தியாரும் மிக முக்கியக் காரணம் என்றால் அது பொய்யல்ல. மகரிஷி ரமணர் வீட்டைத் துறந்து திருவண்ணாமலை சென்ற பொழுது இதையே செய்தார் என்பது நினைவில் எழுகிறது. தொண்டு செய்யச் சென்றவரும் துறவு நோக்கிச் சென்றவரும் ஒரே செயலைச் செய்திருப்பது நினைக்கத்தக்கது.
தூரன் போத்தனூரில் செயல்பட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கு அப்பொழுது முப்பது மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். வித்யாலயத்தின் நடைமுறைகைளக் கேட்டறிந்தார். அதில் உளந்தோய்ந்தார். வித்யாலயத்தில் உணவு கொடுக்கப்படும். மேற்படி செலவுகளுக்கான தொகையாக மாதம் இருபத்தைந்து உரூபாயை ஊதியமாகத் தருவதாக ஐயா அவர்கள் தெரிவித்தார்.
தேவைக்கேற்ற பணத்தைக் கடந்து அதிக ஊதியம் பெறுவது தகாது என்ற எண்ணம் தூரனுக்குத் தோன்றவே மாதம் இருபத்தைந்து ரூபாய் தனக்கு அதிகம் என்றும் மாதம் பதினைந்து ரூபாயே போதுமானது என்றும் சொல்லி (குறைந்த ஊதியம் என்று சொல்லத் தேவையில்லை) தேவைக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பணிசெய்ய அல்ல தொண்டுசெய்யத் தொடங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகள் எவ்வித ஊதிய உயர்வும் பெற்றுக் கொள்ளாது வித்யாலயத்தில் ஆசிரியராகத் தொண்டாற்றினார்.
தலைமையாசிரியரான பிறகும் இவ்வழக்கம் தொடர்ந்தது. ஆனால் ஒரு சிக்கல் அவருக்கு திருமணத்தின் வடிவில் வந்தது....!
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment