இதழ் - 158 இதழ் - ௧௫௮
நாள் : 18 - 05 - 2025 நாள் : ௧௮ - ௦௫ - ௨௦௨௫
பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே
- புறநானூறு 141
புறநானூற்றுப் பாடலில் உள்ள ஆற்றுப்படைப் பாடல் இது. இரண்டு பாணர்களுக்கு இடையில் ஏற்பட்ட உரையாடல் மூலம் வள்ளல்களில் ஒருவனான பேகனது குண நலத்தினையும் தமிழர்தம் பெருமையையும் எடுத்துரைக்கிறார் பரணர்.
பாடலில், வழியில் ஏழ்மையோடு வந்த பாணன், எதிரே பாணன் ஒருத்தன் தன் பாடிணிகளோடு மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். “உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! எனக் கேட்டு நிறுத்தினான்.
“நீங்கள் பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; பாடிணிகள் சிறந்த அணிகலங்களை அணிந்துள்ளனர். அதுமட்டுமன்றி, நீங்கள் தேர் வைத்துள்ளீர்கள். குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்? என்று கேட்கிறாயோ?” எனப் பாணன் வினவவந்ததைத் தானே கேட்டு, அதற்கு விடையும் பகர்ந்தான்.
பாணனே, மேகக்கூட்டம் போன்ற சுற்றத்தோடு உள்ள நீ மிகுந்த பசியுடன் காணப்படுகிறாய்.
பே என்றால் மழைமேகம், மழைமேகம் போன்றவன் பேகன். இவன் வெற்றி வேலை உடையவன். இவனைக் காண்பதற்கு முன்பு நானும் உன்னைப் போல் தான் இருந்தேன்.
மயில் போர்த்திக் கொள்ளாது என அறிந்தும் யோசிக்காமல் தன் போர்வையைக் கொடுத்தவன் பேகன். இவனே எமக்கு இப்பரிசுகளை வழங்கிய அரசன். யானைக் கடாமேல் உலா வரும் பேகன் சிறிதோ, பெரிதோ எந்த அளவாயினும் ஈதலே பெரிது எனச் செயல்படுபவன். இரப்போரின் வறுமை நிலையைப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதை வழங்குபவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது என பரணர் பாடுவதன் மூலம், பேகனது சிறப்பையும் தமிழின் சுவையையும் அறிய முடிகிறது.
வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் பரணர் வருவார்…
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment