இதழ் - 17 இதழ் - ௧௭
நாள் : 21-8-2022 நாள் : ௨௧-௮-௨௦௨௨
மொழி இறுதி எழுத்துகள்
மொழிக்கு முதலில் இன்னின்ன எழுத்துகள் வருவதைப் போன்று மொழிக்கு இறுதியிலும் இன்னின்ன எழுத்துகள்தான் வரவேண்டும் என இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் எழுத்துகளுக்கு மொழி இறுதி எழுத்துகள் என்று பெயர்.
மொழி இறுதி எழுத்துகள் - 24
- உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
- மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகியவை சொல்லின் இறுதியில் வரும்.
- க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய்கள் ஆறும், ங் என்னும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
- பழைய இலக்கண நூலார் மொழி இறுதி குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.
- ஞ், ந், வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்துகளாக வருவதில்லை.
மொழி இறுதியில் உயிர்கள்
- பல, நிலா, கிளி, தீ, வீடு, பூ, சோ(எருது), தே(இறைவன்), கலை, நொ(துன்பம்), போ, கௌ(தீங்கு ) போன்றன.
மொழி இறுதியில் மெய்கள்
- உரிஞ், கண், பொருந், மரம், பொன், நாய், வேர், வேல், தெவ்(பகை), யாழ், வாள் போன்றன.
மொழி இறுதியில் குற்றியலுகரம்
- அவளுக்கு, காசு, பட்டு, அஃது, உப்பு, சோறு.
- மொழிக்கு இறுதியில் க், ச், ட், த், ப், ற் என்னும் வல்லின எழுத்துகள் வராது. எனவே இவற்றோடு உகரம் சேர்ந்து சொல் முடியும். எனவே மொழி இறுதியில் குற்றியலுகரம் வரும்.
ஆவிஞண நமனய ரலவழள மெய்
சாயு முகர நாலாறு மீறே
சாயு முகர நாலாறு மீறே
- நன்னூல். நூற்பா. எண். 107
என்பது பவணந்தி முனிவர் தரும் இலக்கணம்.
( தொடர்ந்து கற்போம் . . . )
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment