இதழ் - 181 இதழ் - ௧௭௧
நாள் : 09 - 1 1 - 2025 நாள் : ௦௯ - ௧௧ - ௨௦௨௫
திருஞானசம்பந்தர்
தமிழக்கடவுள் எனச் சொல்லப்படும் முருகப்பெருமாள் திருஞான சம்பந்தராக அவதரித்துள்ளார் என, கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணியில் பாடியிருப்பது சிறப்புக்குரியது.
அதேபோல் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருஞானசம்பந்தரை முருகப்பெருமானோடு ஒப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் விரகன் என்று அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அவர் வாழ்ந்த காலத்தின் தேவையாக இருந்தது.
புதுப்புது யாப்பு முறைகளை உருவாக்கியவர்.
தமிழ்க்கவிதை உலகில் புதுமை செய்தவர்.
திருவெழுகூற்றிருக்கை, மாலைமாற்று, மொழிமாற்று, திருச்சக்கரமாற்று திருத்தாளச்சதி போன்றன ஒரு சில சான்றுகள் ஆகும்.
மறைந்து மங்கிப் போயிருந்த தமிழ் இசையை மீட்டெடுத்த முன்னோடி.
தமிழ் என்ற ஒன்றை வைத்து மொழி உணர்வால் அவர் காலத்தில் வாழ்ந்த தமிழர்களை ஒற்றுமைப்படுத்திய, ஒன்றுபடுத்திய புரட்சியாளர் என்றும் கூறலாம்.
ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும்.
இதனை இலக்கணத்தில் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
திருஞானசம்பந்தரின்,
“யாமாமா நீ யாமாமா யாழீகாமா” என்ற பதிகம் மாலை மாற்று அடிப்படையில் அமைந்துள்ள பதிகமாகும்.
நான்கு அடிகளைக் கொண்ட ஒரு செய்யுளில் எல்லா அடிகளிலும் சொற்களில் மாற்றம் இல்லாமல் பொருள்களில் மாற்றம் பெற்று வருவது ஏகபாதபாகும்.
இப்பாடலில் ஓரடியில் உள்ள சீர்களே மீண்டும் மீண்டும் வந்து அச்சீர்களைப் பிரித்து உச்சரிக்கும் பொழுது வெவ்வேறு பொருள் தருமாறு அமைவதாகும்.
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
இரண்டடிகளால் பாடப்பெறும் பாக்களாகும். அதாவது முதலடி நான்கு சீர்களாகவும், இரண்டாமடி மூன்று சீர்களாகவும் அமைத்துப் பாடப்படுதலாகும்.
ஞானசம்பந்தரின் “பரசு பாணியர்” என்ற பதிகம் ஈரடி அமைப்பில் அமைந்து சான்றாகியது.
இவ்வாறு தமிழில் பல புதிய வடிவங்களை அவர் வாழ்ந்த காலத்தில் கொடுத்தது மட்டுமல்லாமல் இன்றளவும் தமிழ் மொழி நிலைத்து வாழ்வதற்கு அடி கோலிட்டவர் திருஞானசம்பந்தர் என்ற உண்மையையும் மறத்தல் ஆகாது.
வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020

No comments:
Post a Comment