பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 63                                                                                          இதழ் -
நாள் : 09-07-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
 

 
 
மேடும், பள்ளமும்
 
    சில குடியிருப்புகளின் தன்மையை அவற்றின் பெயர்களால் அறியலாம். மேட்டில் அமைந்த ஊர்களையும் பள்ளத்தில் அமைந்த ஊர்களையும் அவற்றின் பெயர்களால் தெரிந்துகொள்ளலாம். சோழ மண்டலக் கரையில் கள்ளிமேடு என்னும் ஊர் முற்காலத்தில் கள்ளிகள் அடர்ந்து மேடாக இருந்த இடமாகும். புதுச்சேரிக்கு வடக்கே கடற்கரையில் கூனிமேடு என்னும் ஊர் உள்ளது. இன்னும் சேலத்திலுள்ள மேட்டூரும், நீலகிரிக்குச் செல்லும் வழியிலுள்ள மேட்டுப்பாளையமும் மேடான இடங்களில் அமைந்த ஊர்களாகும்.
 
    திட்டை, திடல் முதலிய சொற்களும் மேட்டைக் குறிக்கும் வேறு சொற்களாகும். தஞ்சை நாட்டில் திட்டை என்பது ஓர் ஊர். இன்னும், நடுத்திட்டு, மாளிகைத் திடல், பிள்ளையார் திடல், கருந்திட்டைக் குடி முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டில் அமைந்துள்ள இடங்களாகும்.
 
    பள்ளம் என்னும் சொல் பல ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளது. பெரும் பள்ளம், இளம் பள்ளம், ஆலம் பள்ளம், எருக்கம் பள்ளம் முதலிய ஊர்கள் தஞ்சை நாட்டிலுள்ளன. நெல்லையிலுள்ள முன்னீர்ப் பள்ளமும், இராமநாதபுரத்திலுள்ள பள்ளத்தூரும் பள்ளத்தாக்கான இடங்களில் அமைந்திருந்த ஊர்களாகும்.
 
    குழி என்னும் சொல்லும் பள்ளத்தைக் குறிக்கும். கருங்குழி, ஊற்றுக்குழி, அல்லிக்குழி, பள்ளக்குழி, குழித்தலை முதலிய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் அமைந்துள்ளன. இன்னும், பள்ளத்தைக் குறிக்கும் தாழ்வு என்னும் சொல் தாவு எனச் சிதைந்து சில ஊர்ப் பெயர்களாக வழங்கப்படுகின்றன. கருங்குழித்தாவு, பணிக்கத் தாவு முதலிய ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும். 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment