இதழ் - 22 இதழ் - ௨௨
நாள் : 25-09-2022 நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨
நாள் : 25-09-2022 நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
சிறிய நீர்த் தேங்கிய சிற்றேரியை ஏந்தல் என்று அழைக்கலாம். இந்தச் சொல்லைக் கொண்டு ஊர்ப்பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இளவரசன் ஏந்தல், செம்பியன் ஏந்தல் என்ற ஊர்ப்பெயர்கள் சிற்றேரியின் அடிப்படையில் எழுந்தவை ஆகும்.
ஏரி
உழவுத் தொழிலுக்குப் பயன்படும் நீரைத் தேக்கி வைக்கப்படும் இடத்திற்கு ஏரி என்று பெயர். ஏரியை ஒட்டி எழுந்த ஊர்கள் அந்த ஏரியின் பெயரால் வழங்கப்படுகின்றன. சில ஏரிகள் பழந்தமிழக அரசர்களின் பெயர்களால் இன்றும் வழங்கப்பட்டு வரப்படுகின்றன. சித்தூர் நாட்டில் பல்லவனேரி என்பது ஓர் ஊரின் பெயராகும். பல்லவ மன்னரின் பெயரால் அவ்வேரியின் பெயர் சேர்த்து வழங்கப்படுகின்றது.
பாண்டிய நாட்டில் மாறனேரி என்ற பெயரால் பல ஊர்கள் வழங்கப்படுகின்றன. மாறன் என்ற பெயர் பாண்டியர்களைக் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டை நாட்டில் தென்னேரி என்ற ஊரும் ஏரியின் அருகில் எழுந்ததாகும். அது திரையன் என்ற குறுநில மன்னரால் உருவாக்கப்பட்டது ஆகும். கால மாற்றத்தால் திரையனேரி என்ற பெயர் மருவி தென்னேரி என்று அழைக்கப்படுகின்றது.
கொங்கு நாட்டில் வீரபாண்டியன் என்ற மன்னரால் ஓர் ஏரி உருவாக்கப்பட்டது. அவ்வேரியை சுற்றி எழுந்த ஊர் வீரபாண்டியப் பேரேரி என்று அழைக்கப்படுகிறது.
கடவுள் பெயரால் வழங்கப்படும் ஏரிகளும் தமிழக ஊர்ப்பெயர்களாக அமைந்துள்ளன. திருச்செந்தூரிலுள்ள ஆறுமுகப் பெருமானின் பெயரில் வழங்கும் ஆறுமுகனேரி, நாங்குனேரி வட்டத்தில் மலையாள மன்னனால் வெட்டப்பட்ட ஏரி பத்மனாபன் ஏரி என்று வழங்கப்பெற்று இன்று பதுமனேரி என்று மருவி வழங்கப்படுகின்றது.
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . .
. )
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment