பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 176                                                                                    இதழ் - ௧
நாள் : 28 - 09 - 2025                                                                 நாள் :   - ௨௦௨



பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 
    இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

    பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். 

    தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்றார்.  ஒன்பதாவது வயதில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். பத்தாவது வயதில் "அருணமணி" என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தியவர். இவ்விதழ்களுக்கான ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

    மல்லிகை, பூக்காரி, இயற்கையும் தமிழும் என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றியுள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் நடத்திய "தூவல் வன்மையா நா வன்மையா?" என்ற பட்டிமன்றத்தில் பங்கேற்று "தூவலே வன்மை" என உரையாற்றிப் பரிசை வென்றவர்.

    பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கியவர். 1959 அன்று தென்மொழி எனும் இதழைத் தொடங்கினார். தன் இயற்பெயரான "துரை. மாணிக்கம்" என்பதை விடுத்துப் "பெருஞ்சித்திரன்" என்னும் புனைபெயரில் எழுதினார். தென்மொழியின் ஒவ்வொரு இதழிலும் ஆசிரியவுரைக்கு  முன்னால் மேல் முகப்புப் பகுதியில் கீழ்க்காணும் பாடல் இடம்பெறும்

    “கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
     அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
     துஞ்சுவதில்லை” எனவே தமிழர் தோளெழுந்தால்
     எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
தமிழ் மீதும் தமிழினம் மீதும் இவர் கொண்ட பற்றினை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச் சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். அதுமட்டுமின்றி தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

    இவரது தமிழ் பணியினை சிறப்பிக்கும் முகமாக பாவாணர் அவர்கள், 1973 இல் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

 வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...

சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment