பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 

இதழ் - 8                                                                    இதழ் -   
நாள் : 19-6-2022                                                      நாள் : ௧௯ -௦௬- ௨௦௨௨

 
பழமொழி – 8

' அயிலாலே போழ்ப அயில் '
 
     இரும்பினைப் பிளக்க வேண்டுமெனில் அதே வலிமைகொண்ட கூர்மையான இரும்பினால் மட்டுமே பிளக்க முடியும். என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
    நல்லார் நலத்தை உணரின் அவரினும்
    நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல
    மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
    'அயிலாலே போழ்ப அயில்'.


     நற்குணங்கள் கொண்டவரின் தன்மையை உணர வேண்டுமானால் அவர்களை விட, நற்குணங்கள் கொண்ட ஒருவராலேயே உணர முடியும். அத்தகைய நல்லவர்களைத் தீய  எண்ணம் கொண்டவர்களால் எந்நிலையிலும் உணர முடியாது. நற்குணங்கள் இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும், தீயவராகவே தோன்றுவர் என்று இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. 
 
     இதனை, 'அயிலாலே போழ்ப அயில்' என்ற வரிகள்மூலம் இரும்பை இரும்பால் மட்டுமே பிளக்க முடியும் என்ற உண்மையை உணர முடிகிறது. மேலும்,  'வயிரத்தைக் கொண்டுதான் வயிரத்தை அறுக்க வேண்டும்' என்ற  பழமொழியையும் இங்கு நினைவு கூறலாம்.


கிராமத்துப் பழமொழி (சொலவடை)

‘‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் ’’

     சமைத்த பாத்திரத்தில் உணவு இருந்தால் தான் கரண்டியில் வரும் என இப்பழமொழிக்குத் தவறாக நாம் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
     சஷ்டி தினத்தன்று விரதம் இருந்தால் கருப்பையில் (அகப்பை) குழந்தை வளரும் என்பதே இப்பழமொழியின் விளக்கமாகும். அதாவது குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கும் தம்பதியினார் சஷ்டி தினத்தன்று தவறாமல் விரதம் இருந்து இறைவனை வழிபட்டு வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது  ஆன்றோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்ததை ‘‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’’  என இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளினின் பொருள்திறத்தினை தொடர்ந்து அறிவோம்…

 

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

No comments:

Post a Comment