பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 44                                                                                          இதழ் -
நாள் : 26-02-2023                                                                           நாள் : -0௨-௨௦௨௩
 
  
 
ஆகுபெயர்களின் வகைகள்

பொருளாகுபெயர்
  • முதற்பொருளின் பெயர் அதன் சினைப்பொருளுக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இது முதலாகு பெயர் என்றும் வழங்கப்படும்.
சான்று
  • முல்லைமணம்வீசியது.
இதில் முல்லை என்பது முல்லைக்கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப்பொருளாகிய முல்லைப்பூவுக்கு ஆகி வந்துள்ளது.


இடவாகுபெயர்
  • முதற்பொருள் இடத்திற்கு ஆகி வருவது இடவாகுபெயர் எனப்படும்.
சான்று
  • உலகம் வியந்தது
இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக் குறிக்காமல் அதில் வாழும் மக்களைக் குறித்தது. (மக்களுக்கு ஆகி வந்தது) இது இடவாகுபெயர்.
 
 
காலவாகுபெயர்
  • ஒரு காலத்தின் பெயர் அந்தக் காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்.
சான்று
  • கார் அறுவடை ஆயிற்று.
இதில் கார் என்பது காலப்பெயர் இங்கே அறுவடை ஆயிற்று என்னும் குறிப்பால் இது கார்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்துள்ளது.
 
 
சினையாகுபெயர்
  • ஒரு சினைப்பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.
சான்று
  • தலைக்கு இருநூறு கொடு.
    ஒவ்வொருவருக்கும் என்பதை தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது.
 
 
பண்பாகுபெயர்
  • ஒருபண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது குணவாகு பெயர் என்றும் வழங்கப்படும்.
சான்று
  • இனிப்பு வழங்கினான்  
    இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர் வழங்கினான் என்னும் குறிப்பால் இனிப்பு சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்.
 
 
தொழிலாகுபெயர்
  • ஒரு தொழிற்பெயர் அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகுபெயர் எனப்படும்.
சான்று
  • நான் பொங்கல் உண்டேன்.
    இங்கு பொங்கல் என்னும் சொல் பொங்குதல் என்னும் தொழிற்பெயரைக் குறிக்கிறது. இத்தொழில்பெயர் அத்தொழிலைக் குறிக்காமல் அத்தொழிலால் ஆகும் உணவைக் குறிக்கிறது. ஆகவே இது தொழிலாகு பெயராகும்.

 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment