இதழ் - 163 இதழ் - ௧௬௩
நாள் : 28 - 06 - 2025 நாள் : ௨௮ - ௦௬ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
கிள்ளி மங்கலத்தார்
கிள்ளி மங்கலங்கிழார் என்னும் புலவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிற் காணப்படும். சோழ மரபினர்க்குரிய கிள்ளி என்ற பெயர் தாங்கி நிலவும் பதியில் வேளாளர் குலத்தில் பிறந்த புலவர் கிள்ளி மங்கலங் கிழார் என்று குறிக்கப்பெற்றார். அவ்வூரின் பெயர் இப்பொழுது கிண்ணி மங்கலம் என மருவி வழங்குகின்றது.
பிசிர் ஆந்தையார்
தமிழகத்தில் தலை சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும். அவ்விருவரும் வேறு வேறு நாட்டினராயினும், வேறு வேறு நிலையினராயினும், ஒத்த உணர்ச்சியுடையராய் இருந்தமையால் உயரிய நண்பர் ஆயினர் என்று பரிமேலழகர் கூறிப் போந்தார். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது,
"தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்ப”
என்று கோப்பெருஞ் சோழன் கூறுவதால் அறியலாம். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடி என்று வழங்கப்பட்டு வருகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment